×

மகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்!

நம்மாழ்வார் அவதார நாள் - 23.5.2018

திருமாலின் வாகனமான கருடன் என்கிற பட்சிராஜன், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். நித்ய  சூரிகளுள் அனந்த, கருட, விஷ்வக்‌ஷேனர் ஆகிய மூவரில் கருடனும் இடம் வகிக்கிறார்.கருட பகவான்  அனைத்துதிருமால் திருத்தலங்களிலும் காட்சியளிப்பதைக் காணலாம். இருப்பினும் குறிப்பாக நாச்சியார் கோயிலில்  கல்கருடன், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கருட ஆசனத்தில் காட்சியளிப்பது, திருவரங்கம்,  திருக்கண்ணபுரம் ஆகிய தலங்களில் அருள்புரியும் சங்கு- சக்கரம் தாங்கிய சதுர்புஜ கருடன் முதலானோர் மிக  முக்கியமானவர் ஆவர். அதேபோல் ஆழ்வார் திருநகரியில் ஆதிநாதன் திருக்கோயில் மதில் மீது காட்சியளிக்கும் கருட  பகவானும் மிக விசேஷமானவர். இவரை அருள் பட்சிராஜர் என்றே அழைக்கின்றனர். அந்நியர்களின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலத்தில் கோயில்களுக்கு பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் இருந்தது.  அதனால் பக்தர்கள் சிலர், பஞ்சலோக திருவுருவங்களைப் பாதுகாப்பு காரணமாக இடமாற்றம் செய்து காப்பாற்றி  வந்தனர். அதேபோன்று ஆழ்வார் திருநகரி நம்மாழ்வாரின் திருவுருவத்தைக் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில்  மறைத்து வைத்திருந்தார்கள். நிலைமை சீரானவுடன் ஆழ்வார் திருவுருவத்தைத் தேடிச் சென்றவர்களுக்கு எந்த இடத்தில் உருவம் வைக்கப்பட்டது என்ற நினைவு தவறியதால் அதனைக் கண்டறிய முடியாமல் போயிற்று.

கலக்கமுற்ற அவர்கள், நம்மாழ்வாரைத் தேடி நீலகண்ட கசம் என்ற குளம் அமைந்திருந்த பகுதி அருகே வந்தபோது வானில் ஓர் கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அது சங்கேதமாக எதையோ உணர்த்துவதைப்  புரிந்துகொண்ட அவர்கள், அந்தப் பகுதியில் ஆழ்வாரின் திருவுருவம் இருக்கலாம் என்று உற்சாகத்துடன் தேடத்  தொடங்கினார்கள். அவர்களுடைய பக்தி முயற்சி உடனே பலன் தந்தது. ஆமாம், அங்கே அவரது திருவுருவம் கண்டு  மகிழ்ந்தனர். இவ்வாறு கைக்கெட்டிய திருவுருவத்தை ஆழ்வார் தோழப்பர் என்பாரும், குறவர் இனத்தவர் ஒருவரும்  எடுத்துச்செல்ல முற்பட்டார்கள். அப்போது தோழப்பர் கால் இடறி, குளத்தில் விழுந்து உயிர்விட, குறவர் மட்டும் பல  சிரமங்களை மேற்கொண்டு, அழகர் கோயில் முதலான பலத்தலங்களைக் கடந்து ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரின்  திருமேனியைச் சேர்த்தார்.இதன் காரணமாகத்தான் ஆழ்வார் மீதான அந்தக் குறவரின் பற்றுதலைப் பாராட்டும் பொருட்டு  ஆழ்வாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) ஆனவுடன் குறவன் கொண்டை அலங்காரம் செய்விக்கப்படுகிறது. இது  இன்றும் வழக்கத்தில் உள்ளது.

கருட பகவானை வேத வடிவானவன் என்று போற்றுகின்றன, சாஸ்திரங்கள், நம்மாழ்வாரோ நான்கு வேதங்களையும்  தமிழ் பாடல்களாக்கி ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்ற பெருமை பெற்றவர். எனவே நம்மாழ்வாரின் இருப்பிடத்தை  கருடன் காட்டிக் கொடுத்ததில் வியப்பேதுமில்லை எனலாம். இதனாலேயே ஆழ்வார்திருநகரியில் மதில்மேல்  அமைந்துள்ள கருடனுக்கு சிறப்பு ஆராதனைகள் நித்தமும் நடைபெறுகின்றன. இவரை மதில் கருடன் என்றே  போற்றுவர். இவர் பலருக்குக் குலதெய்வமாய் விளங்கி வருகிறார். இவர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் திகழ்கிறார். பக்தர்கள் இவருக்கு தேங்காய் விடுவார்கள் (சூரை தேங்காய் போல்.) இந்த கருடனுக்கு பிரதி வருடமும் 10 நாட்கள் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. ஆடித் திருவாதிரையன்று இவருக்கு  திருவிழா ஆரம்பமாகி ஆடி சுவாதி (அவதார தினம்) வரை நடைபெறும். இதைப்போல் வேறு எந்த தலத்திலும்  நடப்பதாகத் தெரியவில்லை. 10 நாட்களிலும் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனம் செய்விக்கிறார்கள். அவருக்கு மிகப்  பிரியமான அமிர்தகலசம் என்ற திண்பண்டம் (பூரண கொழுக்கட்டை போன்றது) நைவேத்யம் செய்கிறார்கள்.

கூடவே நம்மாழ்வார் பாசுரங்களையும் ஓதி சிறப்பிக்கிறார்கள். இக்கருடனுக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் தேங்காய் விடல் சமர்ப்பனை முக்கிய பிரார்த்தனை. ஆடி சுவாதியன்று  மட்டும் ஆயிரக்கணக்கான தேங்காய் விடல் கொடுப்பார்கள். இவரைக் குலதெய்வமாய் கொண்டாடும் யாதவர் மற்றும்  தேவர் சமுதாயப் பெருமக்கள், இவ்வைபவங்களில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள். இக்கருடனை  வழிபட்டு இவருக்கு காணிக்கையாக தேங்காய் விடல், பால் குடம் எடுத்தல் மற்றும் விஷப்பூச்சிகளின் உருவங்களை காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள். ஆடி சுவாதியில் கருடனுக்கு சாய பரிவட்டம் சமர்ப்பிக்கிறார்கள். சாய பரிவட்டம் என்பது பாம்பு, தேள், பூரான் போன்ற  பூச்சிகள் வரையப்பட்ட பெரிய வஸ்திரமாகும். இதன் மூலம் கருட வழிபாடு நம்மை விஷப்பூச்சிகளால் ஏற்படும்  ஆபத்தை தடுக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். அவர் அருளால் தொலைந்துபோன பொருட்கள் மீண்டும்  கிடைக்கும்.இந்த கருடன், கோயிலின் மதில் மேல் வடதிசையில் அமைந்துள்ளார். அடுத்தமுறை ஆழ்வார் திருநகரி சென்றால் இந்த கருடனையும் தரிசித்து வாருங்கள். மதில்மேல் சென்று தரிசிக்க படிக்கட்டுகள் உள்ளன.இவருக்கு  அருகே கலை வேலைப்பாடுகள் நிறைந்த, கல்லால் ஆன இரண்டு தீப ஸ்தம்பங்கள் பித்தளைக் கவசத்துடன்  அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றில் நெய்யும், மற்றதில் எண்ணெயும் இட்டு தீபம் ஏற்றுவர். மதில் கருடனை வணங்கி மகிழ்ச்சி பொங்க வாழலாம்.

- எம்.என். ஸ்ரீநிவாசன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி