×

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபர் 2

சென்னை: மலையாளத்தில் ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இணைந்து தயாரிக்கும் பிரமாண்டமான படம், ‘எம்புரான்’. கடந்த 2019ல் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படம் கடந்த ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் சல்மான்கான் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாள ‘லூசிபர்’ படத்தின் 2வது பாகம், ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முரளி கோபி திரைக்கதை எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் தேவ் இசை அமைக்கிறார்.

சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் லைகா புரொடக்‌ஷன்ஸ் மலையாளப் படவுலகிற்கு செல்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸின் தலைமைப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்குமரன் ஏற்றுள்ளார். படம் குறித்து லைகா சுபாஸ்கரன் கூறுகையில், ‘நேர்த்தியான முறையில் கதை சொல்லும் பாணி, அர்ப்பணிப்பு, கலாச்சார செறிவு கொண்ட கேரள மக்களின் குரலாக எதிரொலிக்கிறது, ‘லூசிபர் 2 எம்புரான்’. இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு பெற்று இருக்கிறோம். இது திரைத்துறையின் வளர்ச்சியை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, நல்ல கதைகளை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்வதையும் நோக்கமாக கொண்டது. இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்த ஆசீர்வாத் சினிமாஸுக்கு பெரிய நன்றி’ என்றார்.

 

The post பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபர் 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prithviraj Sukumaran ,Mohanlal.Chennai ,Antony Perumbavoor ,Aseerwad Cinemas ,Subhaskaran ,Lyca Productions ,Mohanlal ,Mohan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஷாலின் ரத்னம்