×

ஜெம்-ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: இந்தியாவில் முதன்முறையாக நடந்தது

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக 2 மருத்துவமனைகளுக்கு இடையே ‘இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ வெற்றிகரமாக நடந்தது.ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் நோயாளிக்கும், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த 53 வயது ஆண் நோயாளிக்கும் கல்லீரல் பாதிப்பு இருந்ததால் அவர்கள் இருவருக்குமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு உறுப்பு தானம் செய்ய அவர்களின் மனைவிகள் முன்வந்த நிலையில் அவர்கள் தங்களின் கணவர்களுக்கு தகுந்த ரத்தக் குழுவை சேர்ந்தவர்களாக இல்லை. அதனால், தானம் செய்ய முடியாமல் போனது.

இந்த நேரத்தில் மருத்துவர்கள் ‘இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ மூலம் ஜெம் மருத்துவமனையில் உள்ள சேலத்தை சேர்ந்த நபரின் மனைவியின் கல்லீரலை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள திருப்பூரை சேர்ந்த நபருக்கு கொடுக்கவும், இவருடைய மனைவியின் கல்லீரலை ஜெம் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு கொடுக்கவும் முடியும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். இதையடுத்து ஜூலை 3ம் தேதி இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து ஜெம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
இரு மருத்துவமனைகளுக்கு இடையேயான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடுதலாக நிறைய வழிமுறைகள் இருந்தன. 5 கிலோ மீட்டர் தொலைவை கொண்ட இந்த 2 மருத்துவமனைகளும் இரண்டு வெவ்வேறு அறுவை சிகிச்சை அரங்குகளில் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தன. கல்லீரலை கொடையாளர்களிடம் இருந்து கவனமாக எடுத்து, பின்னர் மாற்று அறுவை சிகிச்சையை ஒருங்கிணைக்க நிகழ்நேர வீடியோ பதிவுகள் நிறுவப்பட்டன. உறுப்புகளை கொண்டு செல்ல குளிர் சாதன வசதி கொண்ட பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிகிச்சையில் போக்குவரத்து உள்ளிட்ட பல தளவாட சவால்கள் இருந்தன. அதை கடந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சை நடந்தது மருத்துவ உலகில் ஒரு மிக பெரும் சாதனை.

இதுபோன்ற தருணங்கள் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். இரண்டு அறுவை சிகிச்சைகளும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டன. தேவையான அனுமதிகளை விரைவுபடுத்துவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறை முழு ஒத்துழைப்பை வழங்கியது. மேலும் அவசர நிலைகளின் போது சீரான போக்குவரத்து வழித்தடங்களை சட்ட அமலாக்கம் உறுதி செய்தது. கல்லீரல் செயலிழப்பாலும் தகுந்த கொடையாளர்களின் பற்றாக்குறை இருப்பதாலும் ஆண்டுதோறும் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து வருகிறார்கள். தற்போது இந்த 2 மருத்துவமனைகள் இணைந்து செய்துள்ள சாதனை பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வெற்றி எதிர்காலத்தில் இதுபோல பல மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் நடக்க நல்ல துவக்கமாக அமையும்.

The post ஜெம்-ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: இந்தியாவில் முதன்முறையாக நடந்தது appeared first on Dinakaran.

Tags : Gem-Sri Ramakrishna Hospital ,India ,Chennai ,Salem ,Gem Hospital ,Tiruppur ,Sri Ramakrishna Hospital… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்