×

நாய், பூனை கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்

சிவகங்கை, ஜூலை 17: தெரு நாய் மட்டுமின்றி வீட்டில் உள்ள நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ, கீறல்கள் ஏற்படுத்தினாலோ ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:ரேபிஸ் என்பது விலங்குகளின் உமிழ் நீரில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் கடிப்பதன் மூலமாகவும், கீறல்கள் மூலமாகவும் பரவும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும்.

தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ, கீறல்கள் ஏற்படுத்தினாலோ காயத்தை சோப்பு போட்டு குழாய் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யுனோகுளோபுலின்(காயத்தின் தீவிர தன்மையை பொறுத்து) உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியானது அட்டவணைப்படி 0, 3, 7, 28 ஆகிய நாட்களில் போடவேண்டும். இல்லையெனில், முழுமையான பலன் கிடைக்காது.

நான்கு தவணை போட்டு முடிக்காதவர்களுக்கும் கூட ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்படும். எனவே, தடுப்பூசியை அட்டவணைப்படி முழுமையாக செலுத்திக் கொள்ளவேண்டும். நாய் கடித்தவர்களுக்கு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ரேபிஸ் தடுப்பூசி போடப்படும். நாய் கடித்தவர்கள் உடனடியாக காயத்தை கழுவுதல், உடனடியாக மருத்துவ கவனம் பெறுதல், அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்தி முடித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

The post நாய், பூனை கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Collector ,Porkodi ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா