×

பெண்கள் அமைப்புகள் குறித்து ஆபாச பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கம் புகார்

சென்னை: பெண்கள் அமைப்புகள் குறித்து ஆபாசமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்ாளர் சீமான் கடந்த 15ம் ேததி நிருபர்கள் சந்திப்பில் திருப்பூரில் ரிதன்யா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

அப்போது தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப் பிரச்னையில் தலையிடாமல், குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள் என்றும் கஞ்சா, கொக்கைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா அல்லது டாஸ்மாக்கில் குடித்து விட்டு கிடக்கிறார்களா என அருவருக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார். இது பொது வாழ்வில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதாகும்.

மேலும் தமிழகத்தில் பெண் உரிமைக்காக போராடுகிற பெண்கள் அமைப்புகளை ஆபாசமாக பேசுவதுமாகும். பொது வெளியில் பெண்கள் அமைப்புகளை அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்கள் அமைப்புகள் குறித்து ஆபாச பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கம் புகார் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Mother's Association ,Chennai Commissioner ,Chennai ,Chennai Police Commissioner ,All India Democratic Mother's Association ,Naam Tamilar Party ,Metropolitan Police ,Vepery, Chennai… ,Dinakaran ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...