×

பச்சை பசேல் என மாறியது முதுமலை சாலையோரங்களில் வலம் வரும் வனவிலங்குகள்

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களுக்கு மேல் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

டிசம்பர் மாதத்திற்கு பின் மழை குறைந்து நீலகிரி மாவட்டத்தில் உறைபனி மற்றும் பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுக்கும். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் மற்றும் பனியின் காரணமாக புற்கள், செடி, கொடிகள் காய்ந்து விடும்.

சில சமயங்களில் மரங்களில் உள்ள இலைகள் கூட உதிருந்து வனப்பகுதி முழுவதும் காய்ந்து காணப்படும். இதுபோன்ற சமயங்களில், இங்கு வாழும் யானைகள், புலி, சிறுத்தை, மான்கள், கரடி உட்பட அனைத்து விலங்குகளும் நீர்நிலைகளை தேடிச்சென்று விடும். அதன் பின் வனவிலங்குகளை சாலையோரங்களில் காண முடியாது.

மே மாதம் இறுதி வாரத்திற்கு மேல் துவங்கும் தென்மேற்கு பருவமழை இப்பகுதியில் கொட்டி தீர்த்தவுடன் மீண்டும் பசுமை திரும்பும். அதன்பின் 6 மாதங்களுக்கு வழக்கம்போல் முதுமலை புலிகள் காப்பகம் பச்சைபசேல் என காட்சியளிக்கும்.

இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள யானைகள், புலி, சிறுத்தை, கரடி மற்றும் மான்கள் போன்ற வன விலங்குகளை சாலை ஓரங்களில் காண முடியும். இம்முறையும் கடந்த மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள புல்வெளிகள் பச்சைபசேல் என காட்சியளிக்கிறது.

இதனால், சாலையோரங்களில் யானை, சிறுத்தை மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன. சில சமயங்களில் புலிகள் கூட சாலையை கடக்கும்போது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

அதேபோல் சாலை ஓரங்களில் மான்கள் கூட்டம் மற்றும் காட்டு மாடுகள் கூட்டம் எப்போதும் காணப்படுவதால் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும், மசினகுடி பகுதியில் இருந்து முதுமலை செல்லும் வரை சாலையின் இரு புறங்களிலும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனப்பகுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.

The post பச்சை பசேல் என மாறியது முதுமலை சாலையோரங்களில் வலம் வரும் வனவிலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Nilgiris ,Dinakaran ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...