ராமநாதபுரம், ஜூலை 10: முதுகுளத்தூர் ஒன்றியம், வளநாடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40), சிறுவயது முதல் கால்கள் செயலிழந்தும், தலை முதல் கால் வரை தோல் நோயால் பாதிக்கப்பட்டும், கண்பார்வை குறைபாட்டுடன் வாழ்ந்து வருகிறார். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவரின் தந்தை, தாய் காலமாகி விட்டதால், உறவினர்கள் பராமரிப்பு உதவியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நூறு நாள் வேலையை பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குவதற்கு முன்வந்தாலும் கூட, வங்கியில் சந்தோஷ்குமார் சேமிப்பு கணக்கில் ஆதார் எண் இணைக்காததால், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஏற்றப்படும் சம்பளம் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 4 மாதங்களாக வேலையின்றி, சம்பளம் பெற முடியாமல் பரிதவித்து வருகிறார். இந்நிலையில் வேலையும், சம்பளமும் வழங்க ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று முதுகுளத்தூர் பிடிஓ பாலதண்டாயுத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ அவருக்கு உணவு வழங்கி, மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலகத்தில் பேசி ஆதார் எடுக்க உதவி செய்யப்படும், அதன்பிறகு வங்கி சேமிப்பு கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை வேலை மற்றும் நேரடியாக பணம் வழங்க மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தார்.
The post மாற்றுத்திறனாளிக்கு நூறு நாள் வேலை முதுகுளத்தூர் பிடிஓ ஏற்பாடு appeared first on Dinakaran.
