×

முதல் தகுதிச் சுற்றில் இன்று: வளையாத வாஷிங்டன் சளைக்காத டெக்சாஸ்; எம்எல்சி டி20 லீக்

டல்லாஸ்: மேஜர் லீக் டி20 தொடரின் முதல் தகுதிச்சுற்றில் இன்று வாஷிங்டன் ஃபிரீடம் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. டல்லாஸ் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்த வாஷிங்டன் ஃபிரீடம் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் தலா 10 ஆட்டங்களில் விளையாடின.

லீக் சுற்றின் முடிவில் வாஷிங்டன் 8 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்து 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. டெக்சாஸ் அணி 7 ஆட்டங்களில் வென்று 3 ஆட்டங்களில் தோற்று 14 புள்ளிகளுடன் 2வது இடத்தை உறுதி செய்தது. முதல் 2 இடங்களை பிடித்த இந்த 2 அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் களமிறங்க உள்ளன. நடப்புத் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன், பாப் டு ஃபிளெஸிஸ் தலைமையிலான டெக்சாஸ் அணிகள் ஏற்கனவே 2 முறை மோதியுள்ளன.அவற்றில் ஜூன் 22ம் தேதி நடந்த 13வது லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜூலை 2ம் தேதி நடந்த 23வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் 43 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

தற்போதைய 3வது எம்எல்சி தொடரிலும் இரு அணிகளும் ஹாட்ரிக் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால் நேரடியாக தகுதிச் சுற்றுக்கு இரு அணிகளும் 2வது முறையாக முன்னேறி உள்ளன. எனினும் இந்த தொடரில்தான் முதல் முறையாக தகுதிச் சுற்றில் அதுவும் பிளே ஆப் சுற்றில் முதல் முறையாக மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணி ஜூலை 13ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு நேரடியாக முன்னேறும். அதேவேளை 2வது இடம் பெறும் அணி, நாக் அவுட் சுற்றான வெளியேறும் சுற்றில் வெற்றிப்பெறும் அணியுடன் ஜூலை 11ம் தேதி களம் காணும். வெளியேறும் சுற்றில் நாளை சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் – எம்ஐ நியுயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

The post முதல் தகுதிச் சுற்றில் இன்று: வளையாத வாஷிங்டன் சளைக்காத டெக்சாஸ்; எம்எல்சி டி20 லீக் appeared first on Dinakaran.

Tags : Washington ,Texas ,MLC T20 League ,Dallas ,Washington Freedom ,Texas Super Kings ,Major League T20 series ,Major League Cricket tournament ,T20 ,United States… ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!