×

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 2-7-2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (07-07-2025) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காலை 6.15 மணிக்கு ராஜகோபுரத்தின் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதே நேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர், அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்; கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல என்று கூறினார்.

 

The post கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Trichindur ,Kumbaphishek ,Minister ,Sekharbhabu ,Tiruchendur ,Kumbabhishek ceremony ,Thiruchendur Subramaniya Swami ,Temple ,Corps ,Murugapperuman ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...