நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டிகளில், ஃப்ளுமினென்ஸ், செல்ஸீ அணிகள் அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த 32 கால்பந்தாட்ட கிளப் அணிகள், ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் மோதி வருகின்றன. இப்போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நேற்று நடந்த முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரேசிலை சேர்ந்த ஃப்ளுமினென்ஸ் எப்சி அணியும், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால் எப்சி அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் 40வது நிமிடத்தில் ஃப்ளுமினென்ஸ் அணியின் மேத்யூஸ் மார்டினெலி முதல் கோல் போட்டு அசத்தினார். அதன்பின், 51வது நிமிடத்தில் அல் ஹிலால் அணியின் மார்கோஸ் லியானோர்டோ அற்புதமான ஒரு கோலடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் யார் வெல்லப்போவது என்ற பரபரப்பு நிலவிய நிலையில், 70வது நிமிடத்தில் ஃப்ளுமினென்ஸ் அணியின் ஹெர்குலஸ் 2வது கோலை அடித்து அணியை, 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார். அதனால், அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் பிரேசிலை சேர்ந்த பல்மெய்ராஸ் அணியும், பிரிட்டனை சேர்ந்த செல்ஸீ அணியும் மோதின. போட்டி தொடங்கி 16வது நிமிடத்தில் செல்ஸீ அணியின் கோல் பால்மர் அதிரடி கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் பிற்பாதியில், 53வது நிமிடத்தில் பால்மெய்ராஸ் அணியின் எஸ்டெவோ ஒரு கோல் போட்டார். சிறிது நேரத்தில் 83வது நிமிடத்தில் செல்ஸீ அணியின் அகஸ்டின் கிளே 2வது கோல் போட்டு, 2-1 எனற கணக்கில் செல்ஸீ அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
The post கிளப் உலகக் கோப்பை கால்பந்து செமி பைனலில் செல்ஸீ appeared first on Dinakaran.