சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் ஆலோசனையை தொடங்கியுள்ளார். வருகிற 14ம் தேதி வரை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முதல் நாளான நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேற்கு மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
கொங்கு மண்டலத்தை சார்ந்த நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், பவானிசாகர் உள்பட 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘‘கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும். கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம்’’ என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிபற்றி கவலைப்பட வேண்டாம்: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேச்சு appeared first on Dinakaran.