சென்னை, ஜூன் 10: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை திறக்கப்பட்டு ஆண்டுக்கு சராசரியாக 3,650 லிட்டர் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மெட்ரோஸ் இந்திய பசுமை கட்டிடக் கவுன்சிலால் பிளாட்டினம் தரச்சான்று பெற்றுள்ளது. ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது மற்றும் பசுமை கட்டிடத் தரநெறிகளை பின்பற்றுகிறது.
இந்தக் கட்டிடத்தில் 43 காற்று கையாளும் அலகு(Air Handling Units) மற்றும் 29 மேல்சுவர் குளிரூட்டி(Ceiling Suspended Units) உள்ளன. இவை அனைத்து மாடிகளிலும் மற்றும் முக்கியமான அறைகளிலும் குளிர்சாதன வசதிகளை வழங்குகின்றன, இவை மொத்தம் 1750-டிஆர் குளிரூட்டல் திறன் கொண்டவை. குளிர்சாதன செயல்பாட்டின் போது, ஈரமான காற்று கையாளும் அலகுகளின் குளிரூட்டும் காயில்கள் வழியாக செல்லும்போது நீர்த்துளிகளாக வடிகால் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பொதுவாக, இந்த நீர் கழிவு நீராக வெளியேற்றப்படும்.
இந்த ஆலை குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறு பயன்பாட்டிற்காக மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி சராசரியாக 10,000 லிட்டர் நீர் பெறப்படுகிறது. இது மொத்த கட்டிட நீர் பயன்பாட்டின் சுமார் 25 சதவீதம் ஆகும். இந்த திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவின் கீழ் இயங்கும் மின்சாரம் மற்றும் இயந்திரம் துறையால் ரூ.1.5 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 3,650 கிலோ லிட்டர் நீர் பெறப்பட்டு வருடத்திற்கு சுமார் ரூ.6 லட்சம் நீர் கட்டணச் செலவில் சேமிப்பு செய்யப்படுகிறது.
இந்த முயற்சி குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வாழ்க்கையின் அருமருந்தான நீரைப் பாதுகாப்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் நீரை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சியாகும். இந்த குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டது. இந்த ஆலையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று தொடங்கி வைத்தார்.
The post மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஏசியிலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை: ஆண்டுக்கு சராசரி 3,650 கிலோ லிட்டர் நீர் சேமிப்பு appeared first on Dinakaran.