வேளச்சேரி, ஜூன் 10: கோவிலம்பாக்கத்தில் 2வது முறையாக 3 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் உடனடியாக பிடிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், காந்திநகர், 19வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி டில்லி அம்மாள். இவர்களது மகன்கள் வினோத்(32), கார்த்திக்(30). இருவரும் வேன், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் வினோத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு எழுந்த வினோத் மற்றும் குடும்பத்தினர் கதவை திறந்து வெளியே வந்தனர். அப்போது, வீட்டின் நுழைவாயில் கதவில் போடப்பட்டிருந்த துணி தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் 7வது தெருவைச் சேர்ந்த பெயின்டர் நித்தியானந்தன்(40) வீடு மற்றும், தந்தை பெரியார்நகரில் ஒரு வீடு என அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேடவாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், வழக்கு பதிந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 9 நாட்களுக்கு முன்பு இதேபோல், மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய நிலையில், 2வது முறையாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசும் மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post கோவிலம்பாக்கத்தில் 2வது முறையாக 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.