×

விமான ஓடுதளம் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கான்கிரீட் சாலை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் தேரோடும் மாடவீதியில்

திருவண்ணாமலை, ஜூன் 6: திருவண்ணாமலை மாடவீதியில் நவீன இயந்திரம் மூலம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதி அமைந்துள்ள 2.7 கி.மீ தூரம் நவீன தரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக பே கோபுரம் தெரு திரவுபதி அம்மன் கோயில் சந்திப்பு முதல் காந்தி சிலை வரை ரூ.17 கோடி மதிப்பில் கான்கிரீட் சாலை ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாடவீதியில் மீதமுள்ள பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதன்படி, காந்தி சிலை அருகில் இருந்து தேரடி வீதி திருவூடல் தெரு வழியாக பே கோபுரம் தெரு திரவுபதி அம்மன் கோயில் சந்திப்பு வரையில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. விமான ஓடுதளம் அமைக்கும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி இந்த கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் தேரோடும் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக ரூ.17 கோடியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது 2024- 25ம் நிதியாண்டில் 2ம் கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரையிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையை அமைக்க விமான ஓடுதளம் அமைக்க பயன்படுத்தப்படும் பவர் பேவர் என்ற இயந்திரம் மூலம் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவு பெறும். தேரோடும் வீதி லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தும் மாடவீதி என்பதால் தனிகவனம் செலுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவர் அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தரன், கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், சவுந்தரராஜன், துரை வெங்கட், துணை மேயர் ராஜாங்கம், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளர்கள் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விமான ஓடுதளம் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கான்கிரீட் சாலை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் தேரோடும் மாடவீதியில் appeared first on Dinakaran.

Tags : Minister ,E.V. Velu ,Madaveethi of ,Tiruvannamalai ,Minister E.V. Velu ,Madaveethi of Tiruvannamalai ,Madaveethi of Annamalaiyar Temple ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே காதலியுடன் தகராறு; செங்கல் சூளை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை