- எடப்பாடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
- எதிர்க்கட்சி தலைவர்
- எடப்பாடி பழனிசாமி
- அதிமுக அரசு
- திமுக அரசு...
- சட்டசபை

சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தபோது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நீதிமன்ற வளாகங்களில் கூட கொலை சம்பவங்கள் நடக்கிறது. காவல்துறை வேண்டியவர்களுக்கு ஒரு மாதிரியும், வேண்டாதவர்களுக்கு ஒரு மாதிரியும் செயல்படுகிறது. சபாநாயகர் அப்பாவு: இது தேவையா என்று பாருங்கள். பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் ஆதாரம் இல்லாத வகையிலே இங்கே பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் சொல்கிற காரணத்தால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, அதிமுக ஆட்சியின் சாதனைகள் சிலவற்றை தலைப்பு செய்திகளாக சொன்னார். அதேமாதிரி இப்போது நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியினுடைய அந்த நிலைமைகளையும் தலைப்பு செய்திகளாக சொல்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்களை கேட்டால் அவர்கள் ஆட்சியில் பட்ட வேதனைகளை கண்ணீருடன் புலம்புவார்கள். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சாட்சி.
சாமானிய மக்களை வதைக்கக் கூடிய ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. தமிழ்நாட்டை பிளவுபடுத்தியதுதான் அதிமுக ஆட்சியினுடைய சாதனை. எங்கும், எதிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என ஊழலிலே திளைத்து அந்த ஊழல் வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்தவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.இன்னொரு புள்ளி விவரத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றதை விட தற்போது திமுக ஆட்சியில் இந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன.
கொலை, கொள்ளை எல்லாம் சொன்னார் அல்லவா, அதற்கு புள்ளிவிவரம் சொல்கிறேன். கடந்த 12 ஆண்டுகளில் 2024ம் ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைவாக நடந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் கொலைகள் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. எடப்பாடி ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளில் 14,174 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் 15,899 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, கொலை, கொள்ளை நடக்கவிட்டு ரவுடிகள் நடமாட்டத்தை தாராளமாக்கிய ஒரு ஆட்சியை நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்கையும், பொது அமைதியையும் சிறப்பாக வைத்திருக்கிற இந்த ஆட்சியைப் பார்த்து குறை சொல்வது இந்த ஆண்டினுடைய சிறந்த நகைச்சுவை என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு குற்ற வழக்கை சிறப்பாக நடத்துவதற்கான அடையாளம், அதில் எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது என்பதுதான். நீதியை பெற்றுத் தர வழக்கு பதிந்தால் மட்டும் போதாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் முக்கியம். எனவே, நான் குறிப்பிட விரும்புவது, அந்தவகையில் பார்த்தால், எந்த வழக்காக இருந்தாலும், உடனடியாக வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை செய்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. எனவே, தி.மு.க அரசின் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுக-விற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
1 மணி நேரம் பேசிய எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது உரையை 1.43 மணிக்கு பேச தொடங்கி, 3.34 மணிக்கு நிறைவு செய்தார். இதில் அமைச்சர்கள் குறுக்கீடு நீங்கலாக ஒரு மணி நேரம் 10 நிமிடம் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார். யுடியூப் சவுக்கு சங்கர் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. வழக்கு விசாரணையில் இருப்பதால் அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்வதற்கு தயாரானர்கள். அப்போது குறுக்கிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் பேசியது அவைக்குறிப்பில் இருக்கட்டும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது முடிவை மாற்றிக்கொண்டு, தொடர்ந்து பேசினார்.
The post எங்கும், எதிலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என ஊழலிலே திளைத்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
