ஊத்துக்கோட்டை, ஏப். 22: ஊத்துக்கோட்டையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 50 பேரிடம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதைச்சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊத்துக்கோட்டைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்வார்கள். அவ்வாறு பைக்கில் வருபவர்கள் தலைக்கு ஹெல்மெட் அணியாமல் வருகிறார்கள். அப்படி அவர்கள் வரும்போது ஒரு சிலருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் படுகாயம் ஏற்படுகிறது. ஒரு சிலர் இறந்து விடுகிறார்கள்.
தலைகவசம் அணியாமல் செல்வதால் ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் விபத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்.ஐ.க்கள் பிரசன்ன வரதன் ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களை மடக்கினர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த 50 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒரு பைக்கிற்கு ரூ.1000 வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பைக் ஓட்டி வந்தவர்கள் போலீசாரிடம் ஹெல்மெட்டை காட்டிவிட்டு தங்களது பைக்கை பெற்றுக்கொண்டனர். இதனால் ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.
