×

ஐகோர்ட் உத்தரவுப்படி 22 மாதங்களுக்கு பின் திறப்பு; முதன்முறையாக பட்டியல் இன மக்கள் திரவுபதி அம்மன் கோயிலில் வழிபாடு: பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில், கடந்த 2023 ஜூன் 7ம்தேதி நடைபெற்ற திருவிழாவில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தடுத்தனர். இருதரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டதால் கோட்டாட்சியர் உத்தரவுப்படி கோயில் மூடி சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர், எஸ்பி தலைமையில் இருசமூகத்தினரை அழைத்து பலகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2024 மார்ச் 18ம் தேதி முதல் கோயில் திறக்கப்பட்டு பொதுமக்களின்றி ஒருகால பூஜை நடத்தப்பட்டு வந்தது. வழிபாட்டு உரிமை தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானகூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 21ம்தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இரு சமுதாயத்தினரும் ஒன்றாக சாமிகும்பிட சம்மதித்தனர். இதையடுத்து கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தி சீரமைத்து, சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 6 மணியளவில் கோயில் திறக்கப்பட்டு ஒருகால பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி அதிகாலை முதலே மேல்பாதி கிராமத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. கோயில் நடைதிறக்கப்பட்டதும் பட்டியலின மக்கள் முதன்முறையாக கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர். அவர்களுடன் அதேகிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் வரிசையில் சென்று வழிபாடு நடத்தினர்.

ஆனால், செல்போன் அனுமதிக்கப்படவில்லை. ஒரு மணி நேரத்திற்குபிறகு காலை 7.30 மணியளவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மாலை 2 வேளையும் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கமாக ஒருகால பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்: போலீஸ் கடும் எச்சரிக்கை
மேல்பாதி கிராமத்தில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், நல்ல நாள் பார்த்து திறக்கவில்லை என்றும், கோயிலை இடித்துவிட்டு புதிய கோயில் கட்டுவோம் என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏடிஎஸ்பி கூறுகையில், ‘சண்டையிலேயே குறியாக இருக்காதீர்கள். நீங்கள் செய்வது சட்டவிரோதமான செயல். இதேபோல் போராட்டம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்’ என அறிவுரைகூறி அனுப்பி வைத்தார்.

The post ஐகோர்ட் உத்தரவுப்படி 22 மாதங்களுக்கு பின் திறப்பு; முதன்முறையாக பட்டியல் இன மக்கள் திரவுபதி அம்மன் கோயிலில் வழிபாடு: பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman temple ,Villupuram ,Dharmaraja Draupadi Amman temple ,Melpathi village ,Caste ,Dinakaran ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...