சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 3வது டி20 போட்டியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஐபிஎல் 18வது சீசன் போட்டிகள் கடந்த 22ம் தேதி கொல்கத்தாவில் துவங்கின. ஐபிஎல் 3வது போட்டி, சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடந்தது. போட்டி துவங்குவதற்கு முன், துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. அதன் ஒரு பகுதியாக பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத், நடனக் குழுவினருடன் சேர்ந்து ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின், இரவு 7 மணிக்கு மேல் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா ரன் எடுக்காமல், முதல் ஓவரிலேயே கலீல் அஹமது பந்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ரையான் ரிக்கெல்டன், கலீல் பந்தில், 13 ரன்னில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ், அஸ்வின் பந்தில் துாபேவிடம் கேட்ச் தந்து 11 ரன்னுக்கு அவுட்டானார்.
பின் வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் சூர்யகுமார் 29, திலக் வர்மா 31, ராபின் மின்ஸ் 3, நமன் திர் 17, மிட்செல் சான்ட்னர் 11, டிரென்ட் போல்ட் 1 ரன்னில் அவுட்டாகி அணியை பரிதாப நிலைக்கு தள்ளினர். 20 ஓவர் முடிவில் மும்பை, 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. சென்னை தரப்பில், நுார் அகமது 4, கலீல் அஹமது 3, அஸ்வின், நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன் எடுத்தார்.
The post சென்னையில் ஐபிஎல் டி20 மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி appeared first on Dinakaran.
