×

அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்

புதுடெல்லி: அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் பன்னுன் தலைமையிலான எஸ்எப்ஜே அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி காப்பார்டிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பவர் துளசி கப்பார்டு. கடந்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது, அங்கு பிரதமர் மோடியை, துளசி கப்பார்டு சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இரண்டரை நாள் பயணமாக துளசி கப்பார்டு நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் பன்னுன் தலைமையிலான சீக்கியருக்கான நீதி (எஸ்எப்ஜே) அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். காலிஸ்தான் தனி நாடு கோரும் இந்த அமைப்பு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றம் தீவிரவாத அமைப்பான பாபர் கால்சா ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

மேலும், அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் எஸ்எப்ஜே அமைப்பை தடுக்க வேண்டும், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பன்னுனின் எஸ்எப்ஜே தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு அமெரிக்கா மட்டுமின்றி கனடா, இங்கிலாந்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ராஜ்நாத் சிங், துளசிகப்பார்டு சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராஜ்நாத் சிங்கும், துளசி கப்பார்டும், இந்தியா, அமெரிக்கா இடையேயான ராணுவ பயிற்சிகள், சாதகமான ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொழில்துறை விநியோகச் சங்கிலிகள் ஒருங்கிணைப்பு, கடல்சார் விவகாரத்தில் தகவல் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அதிநவீன பாதுகாப்பு கண்டுபிடிப்புகள், சிறப்பு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புக்கான வழிகளையும் ஆராய்ந்தனர்’’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியையும் துளசி கப்பார்டு சந்தித்து ஆலோசனை நடத்தினார். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது. முதல் பயணத்திலேயே உளவுத்துறை இயக்குநர் அனுப்பப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து துளசிகப்பார்டு, இருதரப்பு உளவுத்தகவல்கள் பகிர்வு குறித்து வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளார். இந்தியா நடத்திய பாதுகாப்பு மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

The post அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : US ,India ,New Delhi ,Defense Minister ,Rajnath Singh ,Director of National Intelligence ,Tulsi Gabbard ,SFJ ,Gurbatwant Bannon ,President Trump… ,Khalistan ,Dinakaran ,
× RELATED இமாச்சலில் 500 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 14 பேர் பலி