×

ஒன்றிய, அதிமுக அரசை விட வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு குறைத்துள்ளது: மாஜி ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு

திருப்புத்தூர்: ஒன்றிய, அதிமுக அரசை விட வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு குறைத்துள்ளது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசின் நிதி மேலாண்மையை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்திற்குள் குறைத்ததை பாராட்டுகிறேன். ஒன்றிய அரசின் நிதி பற்றாக்குறை 4.1 சதவீதம்.

அதிமுக அரசின் இறுதியாண்டில் 2021ல் வருவாய் பற்றாக்குறை ரூ.62,126 கோடி, ஆனால் திமுகவின் இறுதியாண்டில் ரூ.41,635 கோடியாக உள்ளது. ஆக வருவாய் பற்றாக்குறை ரூ.21 ஆயிரம் கோடியாக குறைத்தது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது. 2025-26ம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் முதலீடு ரூ.57,231 கோடி. இது நடப்பாண்டை விட 22.4% அதிகம். முதலீடு செலவு பழைய ஆண்டைவிட, கடந்தாண்டை விட அடுத்த ஆண்டில் 22.4% கூடியிருப்பதை பாராட்டுகிறேன். கல்விக்காக ரூ.55,210 கோடி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.

குறு,சிறு தொழில்களை ஊக்குவிப்பதற்கு வங்கிகள் மூலமாக 2025-26ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன்தர ஏற்பாடு செய்யதிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அந்த கடனை தர வங்கிகள் இழுத்தடிப்பார்கள்.
எனவே, வங்கி அதிகாரிகளை அழைத்து கடன் வழங்குவதை நிதி அமைச்சர் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு மொத்தம் ரூ.65,000 கோடி ஒதுக்கியதற்கு பாராட்டுகள். தொல்லியலுக்காக தமிழக அரசு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கீழடி நாகரிகம்தான் தொன்மையான நாகரிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் மூலம் தமிழகத்தின் திறமையை உலகம் அறிய செய்துள்ளது. 2,000 ஏக்கர் குளோபல் சிட்டி போன்ற சென்னைக்கான திட்டங்களை பாராட்டுகிறேன். காவிரி – குண்டாறு திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கவோ, அடிக்கல் நாட்டவோ இல்லை. அது தேர்தலுக்காக போட்ட வெறும் கல் மட்டும் தான். இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் பட்ஜெட். தமிழக அரசு அறிவித்த திட்டங்களை முறைப்படி செயல்படுத்துவதிலும், திட்டங்கள் தரமானதாக அமைய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒன்றிய, அதிமுக அரசை விட வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு குறைத்துள்ளது: மாஜி ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DMK government ,Union ,AIADMK governments ,Former Union Finance Minister ,P. Chidambaram ,Tiruputtur ,Sivaganga district ,
× RELATED அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு...