×

அரியலூர் நகராட்சியில் முதல்வர் மருந்தகங்களில் கலெக்டர் ஆய்வு

அரியலூர், மார்ச் 10: தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தின சிறப்புரையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர்கள் மூலம் அரசின் மானிய வசதி மற்றும் கடனுதவியோடு தொடங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, 24.02.2025 அன்று காணொளிக்காட்சி வாயிலாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர்கள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் என தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் திருமழபாடி, கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சி, செந்துறை, இடைக்கட்டு, இலையூர், தென்னூர், அனைக்குடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 09 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர்கள் மூலம் 09 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் முதல்வர் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள், சித்தா, யுனானி மற்றும் இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் மற்றும் OTC Products ஆகியவற்றின் இருப்பு நிலை மற்றும் மருந்து பொருட்களின் காலாவதி நாள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் மருந்து, மாத்திரைகள் விவரம், கணினியில் பதிவாகியுள்ள விற்பனை விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதல்வர் மருந்தகங்களின் மருந்து, மாத்திரைகள் விற்பனை விவரம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தபோது அரியலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 6 வரையில் ரூ.51,865 மதிப்பிலான மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு 2,031 பயனாளிகள் பயன்பெற்றுளதாக தெரிவித்தனர்.

பின்னர், அரியலூர், கல்லங்குறிச்சி சாலை சாஸ்திரி நகரில் உள்ள முதல்வர் மருந்தக மருந்து கிடங்கினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, பார்வையிட்டு இருப்பில் உள்ள மருந்து பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட கலெக்டர் முதல்வர் மருந்தகம் நடத்தி வரும் தொழில்முனைவோர் கோகிலா என்பவர் தெரிவிக்கையில் ; 10 ஆண்டுகளாக நான் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்தேன்.

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு 3 இலட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும் என செய்திதாள்களில் வந்ததை அறிந்து முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு விண்ணப்பம் செய்தேன். அதன் மூலமாக முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் கிடைக்கப்பெற்று முதல்வர் மருந்தகத்தின் மூலம் தொழில்முனைவோராக மாறியுள்ளேன். பிற மருந்தகங்களை விட விலை குறைவாக இருப்பதால் அதிகளவில் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இம்மருந்தகம் எனது குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கு மிக உதவியாக உள்ளது. இத்திட்டத்தினை வழ ங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, அரியலூர் சரக துணைப்பதிவாளர் மீர் அஹசன் முசபர் இம்தியாஸ், தொழில்முனைவோர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரியலூர் நகராட்சியில் முதல்வர் மருந்தகங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Ariyalur Municipality ,Ariyalur ,Tamil Nadu ,Independence Day ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை