
* தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்
சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கான 1207 மருத்துவ இடங்கள் பறிபோகும் ஆபத்து உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று, சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடுகள் செல்லும் எனவும், மற்ற ஒதுக்கீடுகளும் குறிப்பாக மாநிலத்தில் வசிப்பிட ரீதியான அதாவது மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு அல்லது பிறந்தவர்களுக்கு என்று குறிப்பிட்ட எந்த ஒதுக்கீடும் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அல்லது தமிழ்நாட்டில் பிறந்த மாணவர்களுக்காக 50 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில ஒதுக்கீடு என்பது சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமூக நீதியை கடைப்பிடிப்பதில் இடஒதுக்கீடு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தற்போதைய இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் உள் ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. மேலும் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., டி.எம்., எம்.சி.எச்., போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை இடங்களும் அதிகமாக உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் 2,294 உள்ளன. அந்தவகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கென்று இதுவரை 50சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 1207 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அகில இந்திய ஒதுக்கீடு என்கின்ற வகையில் 1087 பேர் பயன்பெறுகின்றனர்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு எதிர்வரும் ஆண்டுகளில் முழுமையாக முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1207 இடங்கள் பரிபோகும் அபாயம் உருவாகியிருக்கிறது. இந்த இடங்கள் சொந்த மாநிலத்திற்கு மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதால் அந்தந்த மாநில உரிமைகள் பாதிக்கப்படும். ஏற்கெனவே 50 சதவீத மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதர மாணவ, மாணவியரும் தமிழ்நாட்டில் படித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டிற்கான மருத்துவ மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3ம் சுற்று நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில் மாணவர்கள் ஏராளமான பேர் பயிலவும் தொடங்கி விட்டார்கள். எனவே இந்த தீர்ப்பினால் இந்த ஆண்டிற்கு எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது என்றாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலோடு, இந்த தீர்ப்பு சம்மந்தாக மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மிக விரைவில் இந்த ஆலோசனைக்குப் பிறகு மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும். முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பினை பொறுத்தவரை மாநில அரசின் செலவினால் மட்டுமே முதுகலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதனை முழுமையாக ஒன்றிய அரசிற்கு தாரை வார்க்கும் இந்த தீர்ப்பு என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத தீர்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கான 1207 மருத்துவ இடங்கள் பறிபோகும் ஆபத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.
