சென்னை: பட்டாபிராம் பகுதியில் போதையில் வந்தவர்களுடன் தகராறு செய்த அண்ணன், தம்பி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ரெட்டைமலை சீனிவாசன் (27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். இவரது தம்பி ஸ்டாலின் (24). இவர் மீதும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று மாலை இருவரும் மது போதையில் அவ்வழியே பைக்கில் சென்ற மூன்று மர்ம நபர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சமரசம் செய்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து 3 மர்ம நபர்கள் சென்றுவிட்டனர். இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து பழிவாங்கும் நோக்கத்தில் மூன்று மர்ம நபர்களும் பயங்கர ஆயுதங்களுடன் மீண்டும் ஆயில் சேரி மெயின் ரோடு பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ரெட்டைமலை மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உஷாரான ரெட்டைமலை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் மர்ம நபர்கள் ரெட்டைமலையை விரட்டிச் சென்று தனலட்சுமி நகர் மாந்தோப்பில் வைத்து மீண்டும் சரமாரி வெட்டிக் கொன்றுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்ததும் பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை அமைத்து 3 மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தகராறு செய்ததால்தான் அண்ணன், தம்பியை அந்த மர்ம கும்பல் கொலை செய்ததா அல்லது வேறு ஏதேனும் இவர்களுக்குள் முன் விரோதம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் தீவிர மாக விசாரிக்கின்றனர்.
The post பட்டாபிராம் பகுதியில் பயங்கரம் ரவுடிகள் சரமாரியாக வெட்டிக்கொலை: தப்பியோடிய 3 பேருக்கு தனிப்படை வலைவீச்சு appeared first on Dinakaran.
