சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் செல்லும் கல்விச் சுற்றுலா பேருந்துகளை மேயர் பிரியா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் முதற்கட்டமாக 330 மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை முன்னிட்டு, மேயர் பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
2023-24ஆம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையின் போது, மேயர் அவர்களின் உரையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் பள்ளிப் படிப்பின்போதே உலகளாவிய அறிவைப் பெறும் நோக்கில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
2023-24ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் சுமார் 5200 மாணவர்களை பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட ஏற்கனவே அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 2024-25ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5,444 மாணவர்களில், முதற்கட்டமாக இன்று திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் புத்தா தெரு சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 330 மாணவ, மாணவியர் 6 பேருந்துகளில் சோழிங்கநல்லூர்-ஆவின் பால் தொழிற்சாலை, கோட்டூர்புரம்-பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 11.01.2025, 22.01.2025 மற்றும் பிப்ரவரி 2025லும் என மொத்தம் 5,444 மாணவர்கள் தொழிற்சாலைகளைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன், கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
The post சென்னையில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் செல்லும் கல்விச் சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் மேயர் பிரியா!! appeared first on Dinakaran.