×

மாதனங்குப்பம் மற்றும் சுற்று பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ பேச்சு

சென்னை: மாதனங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பேரவையில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் பேசினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் (திமுக) பேசியதாவது: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, 83வது வார்டுக்கு உட்பட்ட மாதனங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் 79, 81, 82 மற்றும் 86வது வார்டுகளில் சுமார் 400 தெருக்களுக்கு மேல் பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதிகளை அமைத்து கொடுக்க, கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.136 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் இந்த பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கி, பணிகள் விரைவில் நடைபெறுமா. இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘கடந்த ஆண்டு இந்த திட்ட பணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவிலேயே டெண்டர் விடப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறையால் சிறிது தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிதிநிலைக்கேற்ப இந்த பணிகள் தொடங்கப்படும். எனவே, விரைவாக அம்பத்தூர் பகுதியிலே அந்தத் திட்டம் தொடங்குவதற்கு உரிய முறையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதியைப் பெற்று திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

The post மாதனங்குப்பம் மற்றும் சுற்று பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Madhananguppam ,Joseph Samuel MLA ,Chennai ,Ambattur MLA ,Joseph Samuel ,DMK ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...