×

‘இட்லி, தோசை கடை போடவேண்டியதுதானே’ பீப் கடைக்காரரை மிரட்டிய பாஜ நிர்வாகி மீது வழக்கு

கோவை: கோவையில் பீப் கடை உரிமையாளரை மிரட்டிய பாஜ நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (41). இவரது மனைவி ஆபிதா (38). இவர்கள் சர்க்கார் சாமக்குளம் நடுநிலைப்பள்ளி அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். அவர்களை அங்கு பீப் பிரியாணி கடை போடக்கூடாது என பாஜ ஓபிசி அணி மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மிரட்டினார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில், ‘‘இட்லி, தோசை கடை போடவேண்டியது தானே’’ என சுப்பிரமணி கூறுவதும், அதற்கு ஆபிதா, ‘‘எங்களுக்கு தெரிந்த தொழிலைதான் நாங்கள் செய்ய முடியும். இவர்கள் பிரச்னை செய்ததால் எங்களது கடைக்கு யாரும் வரவில்லை. பக்கத்தில் மீன் கடை, சிக்கன் கடை உள்ளது. அவர்களை ஒன்றும் இவர்கள் கூறவில்லை’’ என்று கூறுவதும் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த கட்சினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாஜ நிர்வாகிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று கடை உரிமையாளர் ஆபிதா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவர் ரவியும் தள்ளுவண்டியில் பீப் உணவு வகைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறோம். கடந்த 25ம் தேதி பாஜவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் எங்களது கடைக்கு வந்து, இங்கு பீப் கடை போடக்கூடாது என மிரட்டினார். அவருடன் சேர்ந்து 6 பேர் வந்து தொடர்ந்து அச்சுறுத்தி வந்தனர். மீண்டும் கடந்த 5ம் தேதி மாலை வந்து மிரட்டினர். எங்களை மிரட்டி வரும் சுப்பிரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் துடியலூர் போலீசார் பாஜ நிர்வாகி சுப்பிரமணி மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ‘இட்லி, தோசை கடை போடவேண்டியதுதானே’ பீப் கடைக்காரரை மிரட்டிய பாஜ நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Ravi ,Odiampalayam ,Aapita ,Sarkar Chamakulam Middle School… ,Dinakaran ,
× RELATED பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு