×

வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரணியாக சென்று மனித சங்கிலி போராட்டம்: தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூர், வெங்கத்தூர், காக்களூர், சேலை, திருப்பாச்சூர், சிறுவானூர், தலக்காஞ்சேரி, புட்லூர், ஈக்காடு ஆகிய 9 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆணையை சமீபத்தில் அரசு வெளியிட்டது. இதில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள 15வது வார்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். அந்த வார்டில் மட்டுமே 600க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2,500 பேர் இருப்பதால் அந்த வார்டை நகராட்சியுடன் இணைக்காமல் தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டுமென வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று கிராமத்தின் மையப் பகுதியில் ஒன்றாக கூடி பேரணியாகச் சென்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்நிலையில் கோரிக்கையை அரசு நிறைவேற்றக் கோரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நியாய விலை கடையில் அளிக்கும் பொங்கல் தொகுப்பை வாங்காமல் கிராம மக்கள் புறக்கணிப்பு செய்தனர்.

திருவள்ளூர் நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் விவசாய நிலங்கள் எல்லாம் விளை நிலங்களாக மாறுவது மட்டுமின்றி சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உயர்ந்தும் விடும். 100 நாள் வேலையும் பறிபோகும் என்பதால் 15வது வார்டை வெங்கத்தூர் ஊராட்சியாக தனியாக உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் கிராம மக்கள் கலெக்டரை நேரில் சந்தித்து வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டை மட்டும் தனியாக வெங்கத்தூர் ஊராட்சியாக அறிவிக்கக் கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
பெரியபாளையம்: சோழவரம் பிடிஓ அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லியங்குப்பம் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனையும் வாங்க மறுத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சி மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் அதனை புறக்கணித்தனர். இதனால், அப்பகுதி நியாய விலைக்கடை வெறிச்சோடி காணப்படுகிறது.

 

The post வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரணியாக சென்று மனித சங்கிலி போராட்டம்: தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Venkathur Panchayat ,Tiruvallur ,Thiruvallur ,Tiruvallur Municipality ,Melnallathur ,Venkathur ,Kakkalur ,Selai ,Tirupachur ,Siruvanur ,Thalakanchery ,Putlur ,Ekkadu… ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாட்டு...