×

இறுதி வாக்காளர் பட்டியல் ரெடி உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

கோவை, ஜன. 9: கோவை உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் நாளை (10-ம் தேதி) வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோயில் செயல்அலுவலர் கிருத்திகா, அறங்காவலர் குழு நிர்வாகிகள் ராஜா ராமச்சந்திரன், ஜோதிபாபு, மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்கு சாமியை தரிசிக்க ஏகாதசி அன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து அறங்காவலர்கள் கூறியதாவது: கோவை உக்கடம் கோட்டை மேட்டில் கரிகால சோழ மன்னரால்  பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில், பெருமாளுக்கு வருடம் தோறும் திவ்யதேசங்களில் செய்யப்படுவது போலவே, வைகுண்ட ஏகாதசி திருவிழா (பரமபதவாசல் திறப்பு) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, வரும் 10-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு, திருவாராதனம், திருப்பள்ளியெழுச்சி, வேத விண்ணப்பமும், அதை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நடக்கிறது. பின்னர், காலை 7 மணிக்கு  வில்லிப்புத்தூர் கோதை பிராட்டி ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையினை சாற்றி, கரிவரதராஜப் பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு எதிர்சேவை திருவீதியுலா நடக்கிறது. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து பரமபத வாசல் திறப்பு என்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை அதிகாலை நடக்கிறது.

The post இறுதி வாக்காளர் பட்டியல் ரெடி உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ukkadam Karivarataraja Perumal Temple ,Coimbatore ,Vaikunta Ekadashi festival ,Ukkadam Kottaimedu Karivarataraja Perumal Temple ,Krithika ,Raja Ramachandran ,Jyothibabu ,Maheshwari… ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா:...