×

பொது சுகாதார சேவைகள் மக்களுக்கு சென்றடைய குடும்ப கணக்கெடுப்பு பணி: தாம்பரம் மாநகராட்சி தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பொது சுகாதார சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் குடும்ப கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2,85,566 குடியிருப்புகளும், 10,30,958 மக்கள் தொகையும் உள்ளது. தற்போதுள்ள தாம்பரம் மாநகராட்சியில் 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், 50,000 மக்கள்தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என தேசிய நகர்ப்புற நலக்குழுமம் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் குறைந்தபட்சம் 27,187 முதல் அதிகபட்சம் 1,45,427 மக்கள்தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமையப்பெற்றுள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய சேவைப்பகுதி தொடர்ச்சியாக இல்லாமல், இரண்டு பகுதிகளாக பிரிந்து காணப்படுகிறது. இதனால், மருத்துவ சேவை வழங்குவது கடினமாக உள்ளது. இந்த முரண்பாடுகளை சரிசெய்யும் வகையில், தாம்பரம் மாநகராட்சி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, யுஎன்ஐசிஇஎப் நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடும்ப கணக்கெடுப்பு மேற்கொண்டு, அந்த கணக்கெடுப்பில் வீட்டு விவரம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, செல்போன் எண், குடும்ப அட்டை விவரம், மருத்துவ காப்பீட்டு விவரம், குடும்ப விவரம், கல்வி, தொழில், சுகாதார மதிப்பீடு, குழந்தைகளின் தடுப்பூசி விவரம், மகப்பேறு (ம) குடும்ப நல விவரம், நோய் பாதிப்பு விவரம், சமூக பொருளாதார மதிப்பீடு, குடிநீர் விநியோகம், கழிவுநீரகற்றும் விவரம், செல்லப் பிராணிகளின் விவரம் போன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. ஆயூஷ்மான் பாரத் நல அடையாள எண் உருவாக்கி தரப்படுகிறது.
மேலும், இதன் மூலம் மக்கள் தொகையை கணக்கெடுப்பு செய்து, சேவைப் பகுதிகளை வரையறை செய்து, சுகாதார சேவைகள் மக்களை சென்றடைவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளை கண்டறிவதன் மூலம் பொதுசுகாதார சேவைகளை திட்டமிட வழிவகை செய்யும். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தாம்பரம் மாநகராட்சியில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

The post பொது சுகாதார சேவைகள் மக்களுக்கு சென்றடைய குடும்ப கணக்கெடுப்பு பணி: தாம்பரம் மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் ரூ.48 கோடியில் திட்ட பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு