×

படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து சென்றார்: அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்பட படப்பிடிப்புக்காக, நேற்று அதிகாலை 1.45 மணிக்கு தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டு சென்றார். அதற்காக நள்ளிரவு 12.30 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். நள்ளிரவு நேரத்திலும், ரஜினி ரசிகர்கள் பெருமளவு விமான நிலையத்தில் கூடி நின்று வரவேற்றனர்.
அதன்பின்பு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘கூலி திரைப் படம் 70 சதவீதம் முடிந்து விட்டது. இப்போது பாங்காக்கில் வரும் 13ம் தேதி முதல் 28ம் தேதி வரைபடப்பிடிப்பு நடக்கிறது. அதற்காக நான் செல்கிறேன்’’ என்று கூறினார். அதை தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக சட்ட சபையில் நடந்த சம்பவம் உள்ளிட்ட கேள்விகளை கேட்க தொடங்கினர்.

உடனே ரஜினிகாந்த், அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை, என்னிடம் கேட்காதீர்கள் என்று, நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்று கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் செல்ல தொடங்கினார். அப்போது ரஜினி ரசிகர்கள் தலைவா தலைவா என்று உரத்த சத்தத்தில் கோஷமிட்டனர். உடனே ரஜினிகாந்த் போதும் நிறுத்துங்கள் என்று ரசிகர்களிடம் கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் நடக்க தொடங்கினார். அப்போது ரசிகர்கள் கூட்டம் பெரும் அளவு இருந்ததால், அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரஜினியை பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து சென்றார்: அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Thailand ,Chennai ,Bangkok ,Thai Airlines ,Chennai International Airport ,
× RELATED தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!!