பாங்காங்: சீனாவை சேர்ந்த யாங்சின் சிசெங் டெக்னாலஜி என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனமானது அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புக்களை குறிவைத்து பல ஹேக்கிங் சம்பவங்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்துக்கு அமெரிக்க கருவூலத்துறையானது வெள்ளியன்று பொருளாதார தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை அணுகுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனை சேர்ந்தவர்கள் அமெரிக்கர்களுடன் வணிகம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
இது குறித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சீனா சைபர் தாக்குதல்களை முறியடித்துள்ளது. அமெரிக்கா சீனா மீது அவதூறு கூறி வருகின்றது. அமெரிக்கா சமீப காலமாக சீன சைபர் தாக்குதல்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சீனாவுக்கு எதிராக சட்டவிரோத ஒருதலைப்பட்ச தடைகளையும் தொடங்கியுள்ளது. இதனை சீனா உறுதியாக எதிர்க்கிறது. எங்களது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். இதேபோல் அமெரிக்க கருவூலத்துறையின் தேவையற்ற குற்றச்சாட்டு மற்றும் நிறுவனத்தின் மீதான சட்டவிரோத ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளுக்கு யாங்சின் சிசெங் டெக்னாலஜி நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
The post ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு சீன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை appeared first on Dinakaran.