சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சென்றது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது; 2023-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தும் சில வாசகங்களை சேர்த்தும் ஆர்.என்.ரவி படித்தார். 2023-ம் ஆண்டே ஆளுநரின் செயல்பாட்டுக்கு பேரவையிலேயே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அதேபோல, 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் உரை தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளார். ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்படி உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டவர் கலைஞர். கலைஞர் வழியில் நடக்கும் திமுக அரசு ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்க உறுதியுடன் உள்ளது.
சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்ற ஆளுநர் கூறிய புகாருக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு பேரவை மரபுப் படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே வழக்கம். ஆளுநர் கடந்த ஆண்டும் இதே போன்ற புகாரை கூறி வெளியேறினார். ஆளுநர் புகாருக்கு கடந்த ஆண்டே விளக்கம் அளிக்கப்பட்டபோதும் இந்த ஆண்டும் அதே புகாரை கூறியுள்ளார். ஆளுநரின் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
The post ஆளுநர் உரை தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!! appeared first on Dinakaran.