×

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் அறிமுகம் மிரட்டும் புதிய சட்டம் ரூ.250 கோடி அபராதம்: மைனர்களுக்கு புதிய கட்டுப்பாடு

* வெளிநாடுகளுக்கு தகவல் வழங்க அனுமதி
* தண்டனை விவரம் இல்லாததால் குழப்பம்

டிஜிட்டல் தளங்களில் தனிநபர்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், தனிநபர்களின் உரிமையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 14 மாதங்கள் கழித்து அதற்கான சட்ட வரைவு விதிகளை தற்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் தண்டனை விவரம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மைகவ் இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 18ம் தேதிக்குள் இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதற்கிடையே டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு விதிகளின் சில முக்கிய அம்சங்கள் இதோ…
* டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு என்றால் என்ன?
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு என்பது டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான கட்டமைப்பாகும். இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட அல்லது வெளிநாட்டில் இருந்து செயல்படும் எந்தவொரு வணிகமும் – இந்தியர்களுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க அவர்களின் தனிப்பட்ட தரவுகளை பெறுகிறது. இந்த தரவுகள், இந்தச் சட்டத்தின் கீழ் வரும். இத்தகைய தரவுகளை சேகரிப்பது, செயலாக்குவது, சேமிப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது குறித்து சட்ட விதிகள் வகுக்கப்படும்.

* சட்டம் ஏன் அவசியம்?
இந்தியா தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி வரும் நிலையில், டிஜிட்டல் சேவைகளின் வசதி மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. இந்த சட்டம், நாட்டில் விரிவான தரவு பாதுகாப்பு சட்டங்களின் வளர்ந்து வரும் தேவையை பிரதிபலிக்கிறது.

* சட்டத்தின் நோக்கம்
டிஜிட்டல் யுகத்தில் தனிநபர்களின் தகவல் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்புகளை நிறுவுவதன் மூலம் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு இணக்கத்தை நிவர்த்தி செய்வதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

* யாருக்கு பொருந்தும்?
ஆன்லைனில் பெறப்படும் தகவல்கள் அல்லது ஆப்லைனில் பெறப்பட்டு அவை டிஜிட்டல்மயமாக்கப்படும் தகவல்கள் அனைத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும். மக்களின் தனிப்பட்ட தகவல்களை வாங்கி சேவை அல்லது பொருட்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், அமைப்புகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். தேச நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அரசு அமைப்புகள் இந்த சட்டத்திற்கு உட்படாது.

* இந்தியாவிற்கு வெளியே தகவல்களை மாற்றலாமா?
ஆம், தனிநபர் தகவல்களை பெறும் நிறுவனங்கள், அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தியாவிற்கு வெளியே தனிப்பட்ட தரவை மாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. அதே சமயம் அரசால் தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியர்களின் தகவல்களை கொண்டு செல்ல முடியாது.

* ஒப்புதல் கட்டாயம்
தனிநபரின் தகவல்களை பெறுவதில் கட்டாயம் அவரது ஒப்புதலை நிறுவனங்கள் பெற வேண்டும். அந்த தகவல்களை பாதுகாக்கக் கூடிய விதிமுறைகளுக்கும் நிறுவனங்கள் உட்பட வேண்டும். எந்த காரணத்திற்காக தகவல் பெறப்பட்டதோ அதற்காக மட்டுமே தனிநபர்களின் தகவல்களை நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த தேவை முடிந்த பின் தகவல்களை நீக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவான மைனர்கள் எனில் அவர்களின் பெற்றோர் சம்மதம் கட்டாயம் பெறப்பட வேண்டும். உதாரணத்திற்கு சமூக வலைதளங்களில் மைனர்கள் கணக்கு தொடங்க அவர்களின் பெற்றோர்களின் சம்மதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

* தனி வாரியம்
இந்த சட்ட விதிகளுக்கு இணங்காதது குறித்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு இந்திய தரவு பாதுகாப்பு வாரியத்தை நிறுவும். அதன் பதவிக்காலம் 2 ஆண்டாக இருக்கும். அதன் பின் அது நீட்டிக்கப்படும்.

* அபராதம்
தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.250 கோடியை வரை அபராதம் விதிக்கப்படும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வரைவு சட்ட விதியில் அதைப் பற்றி குறிப்பிடவில்லை. குறு, சிறு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் வெவ்வேறு அபராத தொகைகள் நிர்ணயிக்கப்படும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான விதிமீறல்களுக்கு குறைவான அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் அறிமுகம் மிரட்டும் புதிய சட்டம் ரூ.250 கோடி அபராதம்: மைனர்களுக்கு புதிய கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Digital Personal Data Protection Draft ,Parliament ,Dinakaran ,
× RELATED புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உ.பி வாலிபர் தீக்குளிப்பு