×

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங் பகுதியில் விரைவில் பாஸ்ட் டேக் முறையில் கட்டண வசூல்: நவீன சென்சார்கள் மூலம் காலி இடங்களை கண்டறியலாம், சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இந்த இடங்களை விட்டு வெளியேறுவது மக்களுக்கு பெரும் போராட்டமாக இருந்து வந்தது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யவும், மாநகராட்சிக்கு வருவாயை ஈட்டும் வகையிலும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்களை சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.

அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5ம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20ம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் விதிகளை மீறி பஸ், வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனங்கள் அவர்களது விருப்பம் போல் வாகனம் நிறுத்த கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றது. இது தொடர்பான புகார்களும் மாநகராட்சிக்கு அடிக்கடி வந்தது ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு வருவாய் கிடைத்த அதே வேளையில் மாநகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த பிரச்னையை தொடர்ந்து, சென்னையில் மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக டெண்டர் விடும் வரை வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.

இதனால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்தாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது மீண்டும் ஒப்பந்தம் விட்டாலும் இதே குளறுபடிகள் தொடர்ந்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு தான் ஏற்படும், இதை தடுக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி வருவாய்த்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு மாநகராட்சி கமிஷனர் குமர குருபரன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது, சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையாக கடற்கரை வாகன நிறத்த கட்டண வசூலை முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு இயங்கும் அரசு சார் நிறுவனமான டெஸ்கோவிடம் ஒப்படைத்துள்ளது. மேலும் இந்த நிறுவனமும் வாகனம் நிறுத்த கட்டணத்தை பணமாக வசூலிக்க கூடாது எனவும், பணமில்லா பரிவர்த்தனை அதாவது பிஓஎஸ் இயந்திரம் மூலமாக மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்தே, கட்டணத்தை முறையாக வசூலிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் பிரிதிவிராஜ் தலைமையில் மாநகர வருவாய் அலுவலர், சிறப்பு திட்டத்துறை கண்காணிப்பு பொறியாளர், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டல அலுவலர்கள், சேவை வழங்கும் நிறுவனங்களுடன் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்மார்ட் வாகன நிறுத்தம் மற்றும் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் உள்ள வாகன நிறுத்தங்களில் பாஸ்ட் டேக் முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* வருவாய் இரட்டிப்பு
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆலோசனை கூட்டத்தில், கடற்கரையில் எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது, கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு, கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் குறிப்பாக பாஸ்டேக் முறையை அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதை கொண்டு வந்தால், சுங்கச்சாவடி போல, மெரினா அல்லது பெசன்ட்நகர் கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் கார் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும் நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது மெரினாவில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரம் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்த கட்டணம் வசூலாகிறது. நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

The post மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங் பகுதியில் விரைவில் பாஸ்ட் டேக் முறையில் கட்டண வசூல்: நவீன சென்சார்கள் மூலம் காலி இடங்களை கண்டறியலாம், சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marina, Besant Nagar beach ,Chennai Corporation ,Chennai ,Marina Beach ,Besant Nagar Beach ,T. Nagar ,Anna Nagar ,Marina, ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் சாலைகளில்...