- காங்கிரஸ்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மீ ஆ.
- ரஞ்சன் குமார்
- எம்.ஜி.ஆர்
- திமுகா
- ஜெயலலிதா
- மு.கே ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரும் எம்ஜிஆரும் திமுகவில் ஆரம்பத்தில் இணைந்து பணியாற்றி கட்சியை வளர்த்தவர்கள். மக்களை நேரில் சந்தித்தார்கள். அதுபோல ஜெயலலிதா கூட மக்களை நேரில் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் திடீரென ஒரே நாளில் முதல்வர் ஆகிவிடவில்லை. பல தடைகளை, போராட்டங்களைக் கடந்து வந்தவர் அவர். அதோடு, மக்களோடு மக்களாக இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் நடித்தாலும் அரசியலிலும் ஈடுபட்டு மக்களை நேரில் சந்தித்தவர். இன்றைக்கும் அவர் மக்களை நேரில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இந்த தலைவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக கலந்திருந்ததால் தான் அவர்களால் அரசியலில் நிலைபெற முடிந்தது. ஆனால், சினிமாவில் ஒரே பாடலில் கோடீசுவரர் ஆவது போல், இன்றைக்கு ஒரே நாளில் முதல்வர் ஆகிவிடலாம் என்று பலரும் கனவு காண்கிறார்கள். அதுவும் நடிகர் விஜய்யோ முதல்வர் ஆகிவிட்டதாகவே நினைத்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆரை விட தான் பெரிய சக்தி என்று நினைத்து, வெளியே வந்து மக்களைச் சந்திக்கக்கூட மறுக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை காவல் துறையினர் உடனே கைது செய்துவிட்டார்கள். சம்பவம் நடந்து பல நாட்கள் தூங்கிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. திடீரென விழித்து, பெண்களுக்கு தானே பாதுகாப்பு என்பது போல் கைப்பட எழுதி அறிக்கை வெளியிடுகிறார். அதை வைத்து கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைக்கிறார். இவர் நடித்த படங்களில் பெண்களை எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தியிருப்பார் என்பதை அனைவரும் அறிவர். இவர், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க போகிறாராம். முதல் மாநாட்டில், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கர்ஜித்தவர், இரண்டே மாதத்தில் ஆளுநரிடம் சரணடைந்தது ஏன்?. நலன் விரும்பி என்றால், முதல்வரை தான் சந்தித்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
மக்கள் பிரச்னைகளுக்கு இறங்கி வந்து போராட மாட்டீர்கள், மக்களைச் சந்திக்க மாட்டீர்கள் என்றால், யாரை திருப்திப்படுத்த அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்? யாருடைய தாளத்துக்கு ஆடுகிறீர்கள்? இந்தக் கேள்விக்கெல்லாம் நீங்கள் விரைவில் பதில் சொல்லியே ஆக வேண்டும். விசில் அடித்துவிட்டுக் கலைந்து போய்வதற்கு இது சினிமா அல்ல. தொண்டர்களை அரவணைத்து களத்தில் நிற்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்வதற்கு, இது என்ன ‘ஒர்க் ஃப்ரம் ஹோமா’? இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான். உங்கள் அரசியல் கபட நாடகத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
The post வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்வதற்கு இது என்ன ‘ஒர்க் ஃப்ரம் ஹோமா’? ; நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.