×

மது போதை தகராறில் விபரீதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி தொழிலாளி அடித்து கொலை: சகோதரர்கள் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் எம்ஜிஆர் காலனி 7வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (22). இவரது தம்பி தினேஷ் (21). இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களது நண்பர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (32). கூலி தொழிலாளி. இவர்கள் மூவரும், நேற்று மதியம் வீட்டின் அருகே ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறியதும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசியுள்ளனர்.

இதில் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த நரேஷ் மற்றும் அவரது தம்பி தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து துரைசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாத அவர், அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனாலும், சகோதரர்கள் விடாமல் துரத்தி சென்று, நடுரோட்டில் ஓடஓட விரட்டி சென்று, பீர் பாட்டிலால் துரைசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

இதை பார்த்து பொதுமக்கள் திரண்டன். இதனால், சகோதரர்கள் அங்கிருந்து தப்பினர். பின்னர், படுகாயமடைந்த துரைசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணிக்கு துரைசாமி இறந்தார்.

தகவலறிந்த அண்ணாநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, துரைசாமி உடலை மீட்டு, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, நரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மது போதை தகராறில், சரமாரியாக தாக்கியதில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மது போதை தகராறில் விபரீதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி தொழிலாளி அடித்து கொலை: சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Naresh ,MGR Colony 7th Main Road ,Annanagar, Chennai ,Dinesh ,Duraisamy ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறி...