×

தனியார் சொகுசு பஸ் மீண்டும் ஒப்படைப்பு ஆர்டிஒ அலுவலகத்தில் இருந்து திருடிய

குடியாத்தம், டிச.28: குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட தனியார் சொகுசு பஸ் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தனியாருக்கு சொந்தமான ஒரு பஸ் எவ்வித அனுமதியின்றி இயங்கியுள்ளது. அந்த பஸ்சில் உள்ள பதிவெண் ஒரு பைக்குக்குரியது என சென்னை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே கடந்த 24ம் தேதி இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி பைக் பதிவெண் கொண்ட அந்த தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த பஸ்சை நிறுத்தாமல் மீண்டும் வேலூர் நோக்கி டிரைவர் ஓட்டிச்சென்றார். இதனால் அதிகாரிகள் தங்களது வாகனத்தில் சில கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று பஸ்சை மடக்கி பிடித்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்து குடியாத்தம் காந்தி நகரில் உள்ள மோட்டார் வாகன அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், மறுநாள் காலை இந்த பஸ் மாயமானது. இதை யாரோ கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பஸ்சை தேடி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அந்த பஸ்சை அதன் உரிமையாளர் கொண்டு வந்து மோட்டார் வாகன அலுவலகத்தில் ஒப்படைத்தார். மேலும் பறிமுதல் செய்ததற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றுச்சென்றார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார், போலி பதிவெண் பயன்படுத்தி பஸ்சை இயக்கியது ஏன்? எதற்காக இந்த மாவட்டத்தில் பஸ்சை இயக்கினார்கள்? அவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் சொகுசு பஸ் மீண்டும் ஒப்படைப்பு ஆர்டிஒ அலுவலகத்தில் இருந்து திருடிய appeared first on Dinakaran.

Tags : RTO ,Gudiyatham ,Gudiyatham Motor Vehicle Inspectorate ,Vellore ,Tirupattur ,Ranipet ,Dinakaran ,
× RELATED பூங்குளம் மலைப்பகுதியில்...