சனா: ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதலை ஐ.நா தலைவர் கண்டித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஏமனின் ஹவுதி அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் படைகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹவுதியின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையிலான ஐநா குழுவினர் நேற்று முன்தினம் ஏமனில் இருக்கும் தங்களது குழுவினரை பார்க்கவும், மக்களுக்கான உதவிகளை கண்காணிக்கவும் ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது அந்த விமான நிலையத்தை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் பலியாகினர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் மேற்கண்ட சனா விமான நிலைய விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், ஓய்வறை, ஓடுபாதைகள் சேதமடைந்தன. சில மணி நேரம் முன்பு இந்த தாக்குதல் நடந்ததால், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வெளியிட்ட கண்டன பதிவில், ‘சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான சேவைகளை செய்வோர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்று வலியுறுத்தினார்.
The post ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இஸ்ரேல் குண்டு வீச்சில் தப்பினார்: ஐ.நா தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.