சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியில் இருந்தார். ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?. அப்போது அவர் எங்கே போயிருந்தார்?. அண்ணாமலை சாட்டையால் அடித்து வினோதமான போராட்டத்தை நடத்தி உள்ளார்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த போது அவருக்கு சவுக்கு கிடைக்கவில்லையா?. அவருடைய இந்த போராட்டம் கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் சிரிக்கிறார்கள். திமுக ஆட்சியில் இருந்து இறங்கும் வரையில் செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அவர் இனி காலம் முழுவதும் செருப்பு போட முடியாது. மாணவி பலாக்தார வழக்கில் கைதாகி உள்ள குற்றவாளிக்கும், திமுகவுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது.
தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிற துணைவேந்தரால் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். துணைவேந்தர் அனுமதி இல்லாமல் போலீசார் கூட உள்ளே நுழைய முடியாது என்பது விதி ஆகும். துணைவேந்தரால் நியமிக்கப்படுகிற பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். பாதுகாப்பை கண்காணிக்க வேண்டியது, துணைவேந்தரின் கடமை ஆகும் என்றார்.
The post பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.