×

நாகையில் போலீசார் அதிரடி; திருட்டு போன லோடு ஆட்டோ 2 மணி நேரத்தில் மீட்பு

நாகப்பட்டினம்: நாகை அந்தனப்பேட்டையை சேர்ந்த டிரைவர் அருள்பிரகாஷ். நாகை ரயில் நிலையம் அருகே லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது லோடு ஆட்டோவை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்ததால் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஜோதிமணி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கீழையூர் அடுத்த சீராவட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லோடு ஆட்டோ அருள்பிரகாசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது, நாகையை சேர்ந்த மணிவேல்(28) என்பதும், ேலாடு ஆட்டோவை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிவேலை நாகை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், ஏற்கனவே லோடு ஆட்டோ, 2 பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மணிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லோடு ஆட்டோ மற்றும் 2 பைக்கை பறிமுதல் செய்தனர். திருட்டு நடந்த 2 மணி நேரத்தில் லோடு ஆட்டோவை மீட்டு ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

The post நாகையில் போலீசார் அதிரடி; திருட்டு போன லோடு ஆட்டோ 2 மணி நேரத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Arul Prakash ,Nagai Andhanapet ,Nagai railway ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை