- பூண்டி ஏரி
- நீர்வளத் துறை
- திருவள்ளூர்
- பூண்டி
- திருத்தணி
- கும்மிடிப்பூண்டி
- Uthukkottai
- பூந்தமல்லி
- பொன்னேரி
- புழல்
- ஆவடி
- ஈக்காடு
- பூண்டி…
- தின மலர்
திருவள்ளூர்: மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, பொன்னேரி, புழல், ஆவடி, ஈக்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், பொன்னேரியில் 18 மி.மீ., சோழவரத்தில் 15 மி.மீ., செங்குன்றத்தில் 14 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 12 மி.மீ., பூந்தமல்லியில் 10 மி.மீ., ஆவடியில் 7 மி.மீ., ஜமீன் கொரட்டூர் மற்றும் திருவள்ளூரில் 4 மி.மீ., பூண்டியில் 3 மி.மீ., ஊத்துக்கோட்டை மற்றும் திருவாலங்காட்டில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும்.
இந்த நீர்த்தேக்கத்திற்கு தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்களில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 3,080 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த நீர்மட்டமான 35 அடியில் 34.79 அடி நீர் உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,090 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தற்போது இணைப்பு கால்வாய் வாயிலாக, செம்பரம்பாக்கம் ஏரிகு 500 கன அடியும், புழல் ஏரிக்கு 300 கன அடியும் என மொத்தம் 800 கன அடிநீர் மற்றும் பேபி கால்வாய் வழியாக 17 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்ப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
* ரயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து, சாரல் மழையும், மிதமான மழையும் விட்டு விட்டு பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருத்தணி ரயில் நிலையம் அருகில் பிரதான சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
The post மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி; உபரி நீர் திறக்க வாய்ப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.