சென்னை: டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.3ம் தேதி மேலூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. கடந்த நவம்பர் 7ம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7வது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர், நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 16 பேரைச் சுட்டுக் கொள்வதற்குக் காரணமான வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும் டிசம்பர் 9 ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தை ஒன்றிய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு, உடனடியாக வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியுள்ள டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து, இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி 2025ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் மதிமுக சார்பில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டு உரிமைக்குரல் எழுப்ப வாரீர் வாரீர் என்று தமிழ்நாட்டிற்கு ஊழியம் செய்பவன் என்ற முறையில் அழைப்பு விடுக்கிறேன்.
The post டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.3ம் தேதி மேலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்; வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.