×

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்: மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. பிரிஸ்பேனில் 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் 1-1 என தொடர் சமனில் இருக்க 4வது டெஸ்ட் பாக்சிங்டே போட்டியாக மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றிபெற்று முன்னிலைபெறும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. பெர்த் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி சதம் விளாசிய நிலையில் அடுத்த 2 போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். கே.எல்.ராகுல் மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் .அவர் 6 இன்னிங்சில் 235 ரன் விளாசி இருக்கிறார். ரிஷப் பன்ட் எதிர்பார்த்தபடி ஆட வில்லை. பார்ம் இழந்து தடுமாறும் கேப்டன் ரோகித்சர்மா 3 இன்னிங்சில் 19 ரன்களே எடுத்துள்ளார். இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பவுலிங்கில் பும்ரா எதிரணிக்கு கடும் நெருக்கடி அளித்து வருகிறார். அவர் 3 டெஸ்ட்டில் 21 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். சிராஜ் 13 விக்கெட் எடுத்திருக்கிறார். 3வது பந்துவீச்சாளர் இடத்தை ஆகாஷ் தீப் தக்க வைத்துக்கொள்வார் என தெரிகிறது. இந்திய அணியில் பெரிய மாற்ற இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை ஜடேஜாவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் ஆட வாய்ப்பு உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் 2 சதத்துடன் 409 ரன் விளாசி இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக உள்ளார். அலெக்ஸ் கேரி, ஸ்டீவன் ஸ்மித்மிடில் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தொடக்க வீரர் கவாஜா,மிட்செல் மார்ஷ் ரன் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் கேப்டன் கம்மின்ஸ் , ஸ்டார்க் தலா 14விக்கெட் எடுத்துள்ளார். ஹேசல்வுட் காயத்தால் விலகியதால் போலண்ட் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பிடிக்கிறார். நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.

டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டுமெனில் எஞ்சிய 2 டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் கடைசி 2 தொடர்களை இழந்த ஆஸ்திரேலியா, இந்த டெஸ்ட்டில் தோல்விஅடைந்தால் 3வது முறையாக கோப்பையை பறிகொடுக்கவேண்டி இருக்கும். தொடர் சமனில் முடிந்தால் இந்தியா கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால் வெற்றிபெறவேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கில் திறமையான வீரர்;
இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எதிராக தனித்தனி திட்டங்களை தீட்டி அதனை களத்தில் செயல்படுத்த வேண்டும். சுப்மன் கில்லை பொறுத்தவரை அவர் திறமை வாய்ந்த வீரர். அவருடைய தரம் என்ன என்று அனைவருக்குமே தெரியும். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த வீரருக்கு நாம் கொஞ்சம் ஆதரவு அளிக்க வேண்டும். கில்லுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப் போவதில்லை. இந்த 2 வீரர்களுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி பெரிய ரன்களை குவிப்பது என்று நன்றாகவே தெரியும். 30, 40 ரன்கள் எடுத்தால் அதனை பெரிய இலக்காக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதுதான் ஆஸ்திரேலியாலில் மிகவும் கடுமையான பணியாக நினைக்கிறேன். மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன்,என்றார்.

111 வது முறையாக மோதல்
இரு அணிகளும் டெஸ்ட்டில் 111வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன் ஆடிய 110 டெஸ்ட்டில் இந்தியா 30, ஆஸ்திரேலியா 46ல் வென்றுள்ளன. 30 போட்டி டிரா, ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில்…
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா இதுவரை 116 டெஸ்ட்டில் ஆடி 67ல் வென்றுள்ளது. வெற்றி சராசரி 67.67 ஆகும். 32 ல் தோல்வி அடைந்துள்ளது. 17 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது. இந்தியா இங்கு 14 டெஸ்ட்டில் ஆடி 4ல் வெற்றி, 8ல் தோல்வி அடைந்திருக்கிறது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியா இங்கு 2016ல் பாகிஸ்தானுக்கு எதிராக 624/8d ரன் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோர்.இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 465. இங்கு 90,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதில் முதல்நாளுக்கான டிக்கெட்முழுமையாக விற்பனையாகி விட்டது.

பாக்சிங் டே என்றால் என்ன?
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26ம் தேதி அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு ‘பாக்சிங் டே’ என்று அழைக்கின்றனர். இந்த தினத்தில் தொடங்கும் டெஸ்ட்டை பாக்சிங் டே போட்டி என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்: மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Boxing Day Test ,Melbourne Stadium ,Melbourne ,Border-Kawasaki Trophy ,Perth ,Adelaide ,Dinakaran ,
× RELATED 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட்;...