×

சோகண்டி கிராம மக்கள் குறைதீர் முகாம் ரூ.34.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு கலெக்டர் வழங்கினார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி கிராமத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் 77 பயனாளிகளுக்கு ரூ.34.74 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோகண்டி கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றார்.

முகாமில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேலைவாய்ப்பு துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகிய துறைகளின் சார்பில், செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சி அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரணமடைந்த 3 பேரின் குடும்பத்திற்கு உதவித்தொகை, விபத்தில் மரணமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகை, மாவட்ட வழங்கல் சார்பில் 14 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 11 விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மேலும், 4 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கான கடனுதவி, 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி கடன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 5 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், தோட்டக்கலை துறையின் சார்பில் 2 நபர்களுக்கு மானியத்தொகை,

வேளாண்மைத் துறையின் சார்பில் 5 பேருக்கு விசைத் தெளிப்பான், உளுந்து விதைகள், மண்புழு உரப் படுக்கை, சுகாதாரத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டலங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு சுகாதார பெட்டலங்கள் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், சோகண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன், புல்லேரி பெருமாள், மேலேரிபாக்கம் பூபதி, தாழம்பேடு ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சோகண்டி கிராம மக்கள் குறைதீர் முகாம் ரூ.34.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sogandi ,Village People's Grievance Redressal Camp ,Chengalpattu Collector ,Thirukkazhukundram ,Chengalpattu ,District ,Collector ,Arunraj ,Sogandi village ,People's Grievance Redressal Day ,Sogandi Village People's Grievance Redressal Camp ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...