×

கடைக் கண்ணால் கேட்டதை அளிக்கும் காமாட்சி..!!

காமதாயினிசென்ற இதழின் தொடர்ச்சி…

பகவான் பகவத் கீதையில் பக்தர்களை நான்கு விதங்களாகப் பிரிக்கிறார். ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாசு, ஞானி என்று நான்கு விதங்களாகப் பிரிக்கிறார். இப்படி நான்கு விதங்களாகப் பிரிக்கும்போது, மேலே சொன்ன விளக்கங்களை ஒருமுறை மனதில் கொள்ளுங்கள். முதலில் சொன்ன விளக்கங்களானது ஆர்த்திக்கும் அர்த்தார்த்திக்கும் பொருந்தும். ஆர்த்தி என்பவன் துன்பத்திலிருக்கக் கூடியவன். தன்னுடைய துன்பம் நீங்க வேண்டுமென்று முதலில் வருகிறான். அதற்குப் பிறகு, அந்தத் துன்பம் நீங்கியதற்குப் பிறகு அர்த்தார்த்தி என்று, தான் வேண்டியது எல்லாம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான். அம்பிகை என்ன செய்கிறாள் எனில், காமதாயினியாக இருந்து, அவனுக்கு வேண்டியதெல்லாம் அளிக்கிறாள். இது முதல் இரண்டு நிலை. அதற்கடுத்து, அவன் ஜிக்ஞாசு (தீவிரமான ஆத்ம சாதகன்) என்கிற நிலைக்கு வருகிறான். அங்கேயும் அம்பாள் காமதாயினியாக இருந்து, ஆசைக்கெல்லாம் காரணமாக இருந்த மன்மதனை அகற்றிவிட்டு, அதே மன்மதனை ஞானத்தை தேடுபவனாக, இதுவரைக்கும் இவனுக்குள் எந்த ஆசையானது உலகத்தை நோக்கி போய்க் கொண்டே இருந்ததோ, அதே ஆசையை இப்போது ஞானத்தின் மீது வைக்கத் தொடங்கிவிட்டான்.

அத்யாத்மமான அதாவது தீவிரமான வழியில் செல்லக்கூடியவர்களுக்கு ஆசை செயல்படும். ஆனால், அது எப்படிச் செயல்படுமெனில் உயர்ந்த நிலையில் செயல்படும். நாம் சத்சங்கத்தில் இருக்க வேண்டும். ஸ்ரவணம் (நல்ல விஷயங்களைக் கேட்டல்) செய்ய வேண்டும். பேச வேண்டும். கோயில் தரிசனம் செய்ய வேண்டும். வழிபாடு செய்ய வேண்டும். சேவை செய்ய வேண்டும். ஞானம் அடைய வேண்டும். மகான்களைத் தரிசிக்க வேண்டுமென்று ஆசையானது இந்த விதத்தில் செயல்படத் தொடங்கும். இங்கு ஜிக்ஞாசுவாக அதாவது தீவிரமான ஆன்மிகத் தேடல் இருக்கும்போது அவனின் உலகியல்ரீதியாக இருக்கின்ற ஆசைவயப்பட்ட மன்மதன் எரிந்து போய்விட்டான். இப்போது தன்னுடைய கடைக்கண்ணால் உயிர்ப்பித்ததால் அவன் ஞான மன்மதனாக இருந்ததனால், அவனுக்கு வரக்கூடிய ஆசை முழுவதுமே ஞானமயமாக இருக்கிறது. அவனுக்கு வரக்கூடியது அனைத்துமே அத்யாத்மமாக இருக்கிறது. அவன் எதை விரும்பினாலும் அதற்குப் பின்னாலொரு ஆன்மிக தளம் ஒன்று இருக்கிறது. ஆன்மிகப் பின்னணி இருக்கிறது. ஜிக்ஞாசுகளினுடைய ஆசையை ஞானத்தை நோக்கிய ஆசைகளாக மாற்றுவதால் அவள் காமதாயினி.

இதற்கும் அடுத்ததாக, நான்காவது நிலையில் இருக்கக்கூடியவன் ஞானி. இங்கு ஞானிக்குக் கொடுக்கக்கூடியவள், வாங்கக் கூடியவள் என்று எதுவுமே கிடையாது. கொடுப்பவர், வாங்குபவர் என்று எதுவுமே கிடையாது. அந்த இடத்தில் காமேஸ்வரனையே கொடுத்து, ஆத்ம ஞானத்தையே கொடுத்து ஞானியாக உயர்த்துகிறாள். அதனால் காமதாயினி. ஒரே நாமம்தான். ஆனால், எப்படி வெவ்வேறு விதங்களில் செயல்படுகிறாள் என்பதை இந்த நாமம் நமக்குக் காண்பிக்கின்றது. அதனால்தான் இந்த நாமமானது அம்பிகையினுடைய பிரபாவத்தை காண்பிக்கின்றது என்று சொன்னோம். மீண்டும் சொல்கிறோம். ஸுதா ஸாகர மத்யஸ்தா எனும் நாமம் அம்பிகையினுடைய ஸ்தானத்தை காண்பித்தது. காமாட்சி என்பது அம்பிகையினுடைய நாமத்தை காண்பித்தது. காமதாயினி என்பது அம்பிகையினுடைய பிரபாவத்தை காண்பிக்கிறது. இந்த நாமத்திற்கான கோயில் என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், இதற்கு முந்தைய இரண்டு நாமங்களிலுமே காமாட்சியைப் பார்த்தோம். ஸுதா ஸாகரத்திற்கு காஞ்சிபுரத்தையும், காமாட்சி என்கிற நாமத்திற்கு சிறுகரும்பூரில் இருக்கும் சுந்தரகாமாட்சியையும் பார்த்தோம். அதனுடைய தொடர்பாகவே இந்த நாமத்திற்கும் காமாட்சியையே பார்க்கலாம்.

தேவதானப்பட்டி என்கிற ஒரு கிராமம் இருக்கிறது. மதுரையிலிருந்து கொடைக்கானல் சாலையில் வத்தலகுண்டுவிற்கு அருகே இந்த ஊர் இருக்கிறது. மஞ்சள் ஆறு என்று சொல்லக்கூடிய ஹரித்ரா நதிக்கரையில் இந்த கிராமம் இருக்கிறது. அந்த மஞ்சள் ஆறான ஹரித்ரா நதிக்கு ஒரு அழகிய விளக்கம் சொல்லப்படுகின்றது. அந்த ஊரில் ஒரு அசுரன் வந்ததாகவும், அம்பாள் துர்க்கா சொரூபத்தில் வந்து அசுரனை வதம் செய்ததாகவும், அந்த உக்கிரம் குறைவதற்காக அந்த ஆற்றில் அம்பிகை மஞ்சள் தேய்த்துக் குளித்தாள். அந்த அம்பாள் மஞ்சள் தேய்த்து ஸ்நானம் செய்ததால் மஞ்சளானது அந்த ஆற்றில் கலந்து கலந்து அந்த ஆறே மஞ்சளாகி விட்டது. அதனால், அந்த ஆற்றுக்கு மஞ்சள் ஆறு. ஹரித்ரா என்று பெயர். மன்னார்குடியில் இருக்கிற நதிக்கும் ஹரித்ரா என்றுதான் பெயர். அங்கு சுவாமி கோபிகைகளோடு ஜலக்ரீடை (நீர் விளையாட்டு) பண்ணும்போது கோபிகைகளினுடைய மஞ்சள் கலந்ததால் ஹரித்ரா என்று பெயர். இங்கு அம்பாள்அசுரனை வதம் செய்துவிட்டு உக்கிரம் தணிய ஸ்நானம் செய்தபோது அந்த மஞ்சள் கலந்ததால் ஹரித்ராநதி என்று பெயர். விநாயகர் சதுர்த்திக்கு முன்னால் வரக்கூடிய திருதியைக்கு பெயர் மங்கள கௌரி என்று பெயர். இந்த மங்கள கௌரியினுடைய விசேஷம் என்னவெனில், அம்பாள் தன் மேல் தேய்த்த மஞ்சளை, மங்கள கௌரி திருதியை அன்றுதான் பிடித்துவைக்கிறாள். மறுநாளே அப்படி பிடித்து வைத்த மஞ்சள் விநாயகராக மாறுகிறது.

(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

 

The post கடைக் கண்ணால் கேட்டதை அளிக்கும் காமாட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Aarti ,Artharthi ,Jignasu ,Gnani ,
× RELATED ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா?