×

ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத் துறை தரப்பு வாதம்

சென்னை: திமுக எம்.பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, ஆ.ராசா, நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளதால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவிற்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மற்ற வழக்குகளுடன் ஒப்பிட முடியாது எனவும், மேல் விசாரணையில் புதிய தகவல்கள் சேகரிக்கப்பட்டால், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

The post ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத் துறை தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : A.Raza ,Enforcement Department ,Chennai ,DMK ,Raja ,DMK… ,Dinakaran ,
× RELATED வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்