×

26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட்; மெல்போர்னில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்:நேரம் விவரம் அறிவிப்பு

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ள 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் 26ம்தேதி நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1 – 1 என சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்த போட்டி நடைபெறும். டிசம்பர் 26 அன்று துவங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளன.

இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்கும். போட்டி நடைபெற உள்ள ஐந்து நாட்களிலும் அதிகாலை 5 மணிக்கு போட்டி துவங்கும். ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகளாக போட்டி நடைபெறும். போட்டியின் முதல் பகுதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். 7 மணி முதல் 7.40 மணி வரை மதிய உணவு இடைவேளை அளிக்கப்படும். அந்த நாளின் இரண்டாவது பகுதி 7.40 மணி முதல் 9.40 மணி வரை நடைபெறும். பின்னர் 9.40 முதல் 10 மணி வரை தேநீர் இடைவேளை அளிக்கப்படும்.

பின்னர் அந்த நாளின் மூன்றாவது மற்றும் கடைசி பகுதி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கி 12 மணி வரை நடைபெறும். போட்டி சூழ்நிலையை பொறுத்து மூன்றாவது பகுதி ஆட்டம் சிறிது நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற செயலி மற்றும் அதன் இணையதளத்தில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

பந்துவீச்சை அடித்து நொறுக்குங்கள், ரோகித்துக்கு ரவிசாஸ்திரி அட்வைஸ்;
ஆஸிக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோகித்சர்மா 6-வது பேட்டிங் வரிசையில் ஆடுகிறார். ஆனால் எதிர்பார்த்தபடி அவர் ரன்கள் அடிக்கவில்லை. இரு டெஸ்டில் வெறும் 19 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது. “ரோகித் சர்மா தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

ஏனெனில் 6-வது வரிசையிலும் அவரால் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும். கடந்த முறை அவர் களம் இறங்கிய போது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தார். தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்’’ என்றார்.

The post 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட்; மெல்போர்னில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்:நேரம் விவரம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Boxing Day Test ,India ,Australia ,Melbourne ,Time ,Gavaskar Test ,Dinakaran ,
× RELATED சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...