×

மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாள் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்கள் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினசரி ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பல நாட்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. வரும் 25ம் தேதி மாலையில் சன்னிதானத்தை அடையும். இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த தீபாராதனையை தரிசிக்க அன்று சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

வரும் 25, 26 ஆகிய தேதிகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 25ம் தேதி ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 26ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்த 2 நாட்களிலும் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவார்கள். தங்க அங்கி சபரிமலையை அடையும் 25ம் தேதி மதியத்திற்குப் பின்னர் மாலை வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

The post மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாள் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandala Puja ,Thiruvananthapuram ,Mandala ,Puja ,Sabarimala Ayyappa temple ,
× RELATED கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம்...