×

கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை எனக்கூறி தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: ஏற்றிய கொடியை ஒரேநாளில் இறக்கினர்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடியில் வசிப்பவர் பிரியதர்ஷினி. தவெக ஒன்றிய மகளிரணி நிர்வாகி. விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலும் மகளிரணி நிர்வாகிகளை அழைத்து கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவர்களது காலனியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பிரியதர்ஷினி தலைமையிலான மகளிரணியினர் செய்துள்ளனர்.

அங்கு கொடியேற்றி வைத்த அரியலூர் மாவட்ட செயலாளர் சிவா (எ) சிவக்குமார் தலைமையிலான நிர்வாகிகள், பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த பிரியதர்ஷினி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் ஏற்றப்பட்ட கட்சி கொடியை நேற்று கீழே இறக்கினர். தாங்கள் அணிந்திருந்த கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி மற்றும் பேட்ஜ் அட்டைகளை கழற்றி எடுத்து சென்றனர்.

அப்போது அங்கு வந்த நிர்வாகி ஒருவர், மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி நீங்கள் இறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு பிரியதர்ஷினி மற்றும் மகளிர் அணியினர், நாங்கள் சொந்த செலவில்தான் செய்துள்ளோம். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று விஜய் கூறியதால் தான் சேர்ந்தோம். ஆனால் பெண்களுக்கு மதிப்பில்லை என்பதால் கட்சியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை எனக்கூறி தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: ஏற்றிய கொடியை ஒரேநாளில் இறக்கினர் appeared first on Dinakaran.

Tags : Thaveka Mahila Rani ,Ariyalur ,Priyadarshini ,Kargudi ,Tha.Pazhur ,Union ,Ariyalur district ,Thaveka Union Mahila Rani ,Mahila Rani ,Vikravandi ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...