பேட்டை: நெல்லை அருகே அரசு நிலம், தனியார் தோட்டப்பகுதிகளில் கொட்டப்பட்ட கேரளா மாநில மருத்துவ கழிவுகள் அதிகாரிகள் முன்னிலையில் 8 பொக்லைன் இயந்திரம் மூலம் 16 லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. நெல்லையை அடுத்த கோடகநல்லூர் தனியார் தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில் கேரள மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டிருந்தது.
இந்த கழிவுகளை கேரளாவுக்கே எடுத்து செல்லும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவனத்தினர் ஏற்பாட்டில் கேரளாவில் இருந்து நெல்லை வந்த 16 டாரஸ் லாரிகள் நேற்று நடுக்கல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டது. சுத்தமல்லி, கொண்டாநகரம், முன்னீர்பள்ளம், சீதபற்பநல்லூர், கோடகநல்லூர், அரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டர் சாக்ஷி தலைமையில் கேரளா மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னிலையில், 8 பொக்லைன் இயந்திரம் மூலம் 16 டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டது.
இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், கழிவுகள் வருவதை தடுக்க செக்போஸ்ட்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்வதற்கு கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிந்துள்ள 4 வழக்கில் 3பேர் கைதாகி உள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்றார்.
* தற்காலிகமாக பணி நிறுத்தம்
சுத்தமல்லி பகுதியில் மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி நேற்று காலை 11 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. கொண்டாநகரம், பழவூர் கிராமங்களில் சுமார் 6 லாரி அளவுக்கு கழிவுகள் கிடப்பதாகவும், அவற்றை அகற்றும் பணி இன்று தொடங்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* தமிழக எல்லை வரை பாதுகாப்பு
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் 16 டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நெல்லை அருகே கல்லூர் பகுதியில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்துச் சென்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தை கடந்து கேரளா எல்லையான புளியரை வரை லாரிகள் செல்வதை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.
The post நெல்லை அருகே கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகள் அதிரடியாக அகற்றம்: 16 லாரிகளில் அள்ளிச் சென்றனர் appeared first on Dinakaran.